நடராஜரின் கால் ஊனமா?

பாபவிநாச முதலியார் என்பார் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். நடராஜரைப் பற்றிப் பல பாடல்கள் இயற்றியுள்ளார். வஞ்சப் புகழ்ச்சி அணி ( நிந்தாஸ்துதி) என்னும் வகையில் அமைந்த பாடல்கள் இவை. இன்னாட்களில் இப்படி எழுத முடியுமா என்பது சந்தேகமே. நடராஜரைக் கிண்டல் பண்ணுவது போல் அமைந்துள்ள பாடல்கள் இறுதியில் பக்தியில் முடிகின்றன. அபாரமான பக்தி மற்றும் கவித்திறன் இருந்தாலேயே இப்படி எழுதமுடியும் என்று தோன்றுகிறது.

நடராஜர்

கவிஞர் கேட்கிறார்:

‘ஓய் நடராஜரே, நீர் நன்றாக நடமாடிக் கொண்டிருந்தீரே, இப்படி ஒரு கால் முடமாகிப் போய் தூக்கிக் கொண்டு நிற்கிறதே ஏனையா?

சிற்சபையில் உங்கள் ஊரில் ஆடிக்கொண்டிருந்தீரே, என்னவாயிற்று உமக்கு?

உடலே அக்னியாகக் கொதிக்கிறது. அதில் சுடும் சாம்பலையும் பூசிக்கொண்டுள்ளீர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக உடல் சீதளத்தை உண்டு பண்ணி, அதனால் உமக்கு வாத நோய் ஏற்பட்டு, அதனால் இடது கால் தூக்கிக் கொண்டு, அதனால் இப்படி நிற்கிறீரோ?

இல்லை, ஒருவேளை மார்க்கண்டேயருக்கு உதவுவதற்காக யமனை எட்டி உதைக்கும் போது கால் சுளுக்கிக் கொண்டதோ? அதனால் இப்படி நிற்கிறீரோ?

ஓ, இப்போது புரிகிறது. சுந்தரமூர்த்தி நாயனாரின் திருமணத்தைத் தடுத்தீர். பின்னர் அவருக்காகப் பரவை நாச்சியாரிடம் தூது சென்றீர் அல்லவா? அப்போது பரவை நாச்சியாரின் வீட்டு வாசற்படி இடித்ததால் உமது கால் இப்படி ஆகிவிட்டதோ?

இல்லை, எனது பாவத்தால் நீர் இப்படி ஆனீரோ? எனது பாவங்கள் உம்மை இப்படி நிற்கச் செய்தனவோ?

அல்லது, உமையொரு பாகனான உமது இடப்பாகத்தில் உள்ள சிவகாமி தனது கால் தரையில் பட்டால் நோகும் என்பதால் கீழே படாமல் தூக்கி வைத்துள்ளீரோ?

அர்ச்சுனனுடன் செய்த போரில் விழுந்து அடிபட்டு அதனால் இப்படி ஆகிவிட்டதோ?

கனகசபையில் நீர் ஆடும் நடனம் கண்டவர்கள் கண் பட்டுவிட்டதால் உமக்கு இடது கால் இப்படி ஆகிவிட்டதோ?

இதெல்லாம் இல்லை, இதுதான் பரமபதம் அளிக்கும் பாதம், இதைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எங்களுக்குக் காட்டவே இப்படி நிற்கிறீரோ?’

அசஞ்சலமான பக்தி இல்லாமல் இப்படிப் பாட முடியாது என்று நினைக்கிறேன். இப்போது பாடலைப் பாருங்கள்:

‘நடமாடித் திரிந்த உமக்கு இடதுகால் உதவாமல்
முடமானதேன் என்று சொல்லுவீரய்யா!
திடமேவும் தில்லைநகர் மருவு பேரானந்த
சடைவிரித்தாடினவா தேவ சிற்சபை அறிய
திருநீறைச் சுமந்தீரோ! நெருப்பான மேனிதனில்
சீதத்தினால் மிகுந்த வாதகுணமோ!
ஒருமையுடன் மார்கண்டர்க்கு உதவியாய் மரலி விழ
உதைக்க சுளிக்கேறியுண்ட குணமோ!
பரவைதன் தெருவாசற்படி இடறிற்றோ, எந்தன்
பாவமோ, என் சிவனே, மூவர்க்கும் முதல்வன் என்று
தனஞ்செய மஹிபனுடன் சமரில் அடிபட்டு விழ
சந்திலே முடி பிசகி நொந்ததுவோ?
இனம் புரியும் தாருகா வனமெங்கும் திரிந்ததில்
முள்ளேறுண்டதோ சொல்லும்? – முறிந்ததுவோ?
கனகசபை தனில் நடனம் கண்டோர்கள் அதிசயிக்க
கண்ணெண்றுண்டதோ சொல்லும்?
விண்ணவர்க்கும் முதல்வன் என்று
பக்தி செய்யும் பெரியோர்கள் பாபநாசமாகும்
பரமபதம் இதுவென்று தூக்கி நின்றதுவோ?
சக்தி சிவகாமவல்லி தன்பாதம் நோகுமென்றே
தரையில் அடிவைக்க தயங்கி நின்றதுவோ?
சத்யலோக அதிபதி தாளத்திற்கேற்ப நடம்
தாங்கியே ஒரு காலைத் தூக்கி நின்றதுவோ?

இம்மாதிரி வேறு பாடல்கள் இருப்பின் தெரியப்படுத்துங்கள்.

5 thoughts on “நடராஜரின் கால் ஊனமா?

  1. ‘ஏன் பள்ளிகொண்டீரையா, ஸ்ரீ ரங்கநாதா’ என்ற பாடலில், ‘ஓடிக் களைத்தோ, தேவியைத் தேடி இளைத்தோ, ……மாநகரை இடித்த வருத்தமோ, ராவணாதியரை மடித்த வருத்தமோ’ என்றெல்லாம் வருகிறது. களைத்து, ஓய்ந்து போய் படுத்து விட்டாயோ என்று கூறுவதும் ஒருவித வஞ்சப்புகழ்ச்சிதானே.

    ஒரு காக்கையைக்கூட குறி பார்த்து அம்பால் அடிக்கத் தெரியவில்லையே என்ற பொருள்பட ஒரு வரி வருகிறது, ‘எவரி இச்சிரிரா, ஆ சர சாபமு [இந்த வில்லையும் அம்பையும் யார் கொடுத்தார்கள்] என்ற தியகராஜ கீர்த்தனையில். திருடர்களுக்கு காட்சி கொடுத்த ராமன், ராமா, ராமா என்று அனவரதமும் கதறும் தனக்கு காட்சி கொடுக்கவில்லையே என்ற கோபத்தில் உதித்த பாடலில், ராமனுடைய வில்லையும் பாணம் விடும் திறமையைப் பற்றியும் பாடுகிறார் அவர்.

    இப்படியாகப் பல பாடல்கள் அமைந்துள்ளன.

    Like

  2. இடப்படும் மறுமொழிகளுக்கெல்லாம் உடனுக்குடன் நன்றி தெரிவித்து, தன் பரந்த மனதைப் பறை சாற்றிக்கொள்ளும் திரு ஆமருவி இங்கு மௌனம் சாதிப்பதேன்? ‘இம்மாதிரி வேறு பாடல்கள் இருப்பின் தெரியப்படுத்தங்கள்’ என்று எழுதி இருந்ததால், விவரங்களைக் கொடுத்தேன்.

    நான் வேறு சில பதிவுகளில் எழுதியுள்ள மறுமொழிகள் இவர் விருப்பத்திற்கு இசைவாக அமையவில்லை போலும். ஆகையால், ‘avoid’ செய்ய முடிவு செய்து விட்டார். நன்று.

    Like

Leave a comment