‘இன்னும் எழுதல்லையே, உங்கடவாளா இருக்கறதால எழுதல்லையா?’
ஒரு குடும்பத்தின் நிகழ்வு என்பதால் வாளாவிருந்தேன். கடமையை ஆற்றி விடுகிறேன். பரம வைதீகர்களாகக் காட்டிக் கொள்பவர்கள் வேறு பாத்திரக் கடைக்குச் செல்லலாம்.
சிங்கப்பூரின் தந்தை அமரர் லீ குவான் யூவை விட ஒரு முற்போக்காளரைக் காண முடியுமா? அவரது மகள் ( பிரபல நரம்பியல் மருத்துவர் Dr.Lee Wei Ling) திருமண விஷயத்தில் திரு.லீ சொன்ன அறிவுரை நியாயமானது. (அவரது சுய சரிதையில் உள்ளது). இதனால் அவரைப் பிற்போக்காளர் என்று ஒதுக்க இயலுமா?
பிற்போக்கு என்று ஏசப்படுவேன் என்றாலும் சொல்கிறேன்.
படிப்பு தேவைதான். நல்ல படிப்பு அவசியம் தேவை தான். ஆனல், சம்பிரதாயப் படிப்பும் தேவையே. பிள்ளைகளுக்கு அவற்றையும் சொல்லிவைப்பது அவசியம். செக்யூலர் கல்வி என்கிற ஹோதாவில் சம்பிரதாயம் வேண்டாம், பண்டைய நெறிகள் வேண்டாம், அவை பிற்போக்கு என்று சொல்லிச் சொல்லியே வளர்த்தால் இவ்வாறான விளைவுகளே ஏற்படும்.
இப்படிச் சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. ஏனெனில் எந்த முற்போக்குப் பத்திரிக்கையும், இலக்கியக் கழகமும் எனக்கு விருதளிக்கப் போவதில்லை. அதனால் என் கருத்துக்களை மாற்றிக் கொள்ள எனக்கு அவசியம் இல்லை. சபரி மலை விஷயத்திலும் நான் சம்பிரதாய நம்பிக்கைக்கே வாக்களிக்கிறேன். பெண்ணீயம் என்று வெற்றுக் கூச்சல் இட எனக்குத் தேவை இருக்கவில்லை. ஒரு அடையாளம் ஏற்படுவதற்காக கலாச்சார விழுமியங்களை மறுதலித்துப் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை.
‘கல்யாணப் பையன் சந்தியாவந்தனம் பண்றான், மடிசிஞ்சி’ என்று ஒதுக்கும் பிராம்மணப் பெண்கள், ‘இதப்பாருங்கோ, மாமியார், நாத்தனார்னு எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்கப்படாது’ என்று கட்டளை விதிக்கும் பெண்கள், ‘பொண்ணு மாடர்ன். அதுனால ஜீன்ஸ் போட்டுண்டே கோவிலுக்கு வருவா. சும்மா புடவை கட்டிக்கோ, சமையல் பண்ணுன்னு தொந்தரவு பண்ணாத இடமா பாருங்கோ’ என்று கேட்கும் பெண்ணின் தாயார்கள், ‘தீட்டு, மடி, ஆசாரம்னு நாட்டுப்புறமா இருக்கப் படாது. மாடர்னா சோசியலா இருக்கற ஃபேமிலியா பாருங்கோ’ என்று கேட்கும் பெண்ணின் பெற்றோர் இருக்கும் சமுதாயத்தில், ஒரு சுதா ரகுநாதன் தனது மகளுக்கு இந்துவாக விரும்பும் ஆப்பிரிக்க அமெரிக்கரைத் திருமணம் செய்ய அனுமதித்தது குற்றமில்லை.
ஆனால், குடும்பம் எப்படிப் போனாலும், பெற்றோர் எந்த இழிச்சொல்லுக்கு ஆட்பட்டாலும், சமூகம் என்ன சொன்னாலும், என் இஷ்டப்படிதான் நடப்பேன், ஏனெனில் நான் ஒரு 'லிபரேட்டட்' பெண் என்று நினைக்கும் பெண்கள் இருக்கும் வரை, புத்திர பாசத்தால் தலை குனிந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட எத்தனையோ சுதாக்கள் மற்றும் ரகுநாதன்கள் தினம் தினம் மனம் புழுங்கிச் செத்துக்கொண்டேயிருப்பார்கள். இதுவும் நிதர்ஸனம்.
இப்படியான பெற்றோர்கள் தாங்களும் புண்பட்டு, தங்களது பிள்ளைகளின் செயல்களை அங்கீகரிக்க முடியாமல், அதே சமயம் அங்கீகரித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் அங்கீகரிப்புக்காகத் தங்களது குல குருக்களையும் அவர்கள் வகிக்கும் ஆஸ்தானங்களையும் கூட வம்புப் பேச்சிற்கு ஆளாக்குவதும் கூட நிதர்ஸனமே.
மேற்சொன்ன அனைத்து நிதர்ஸனங்களையும் ஒப்புக்கொண்டே ஆக வேண்டிய நிதர்ஸன உலகத்தினரான நாம், அடுத்த நிதர்ஸனக் கல்யாணம் நடைபெறும் வரையில் வெறும் வாயை மென்றுகொண்டிருப்போம்.
அதுவே நமது நிதர்ஸனம்.
பி.கு.: பருப்பு சாதம் தான் சாப்பிடுகிறேன். ஆனாலும் ரோஷம் உண்டு. எனக்கெனக் கருத்துகள் உள்ளன. முற்போக்காகத் தெரிவதற்காகக் கருத்துக்களை மாற்றிக் கொள்ளத் தேவையில்லாத அளவிற்குத் தன்மானம் உள்ளது. நன்றி.
Leave a reply to Santhanam Cancel reply