
முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களின் தாள் பணிகிறேன். ‘தஞ்சாவூர்’ என்னும் பேரானந்தப் பனுவலை யாத்திட்ட அன்னார் புவனம் மூன்றுடை நாச்சியார் மற்றும் பரமசாமியின் அருளால் எல்லா நலனும் இன்னமும் பல நூல்களியற்றி அடியோங்களது அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்.
ராஜராஜன் காலத்து நிர்வாகம் பற்றிய செய்திகள் வியப்பூட்டுவன.
அம்மன்னன் காலத்தில் வங்கிகள் இருந்துள்ளன. ‘தஞ்சாவூர்ப் பெரும் பண்டாரம்’ என்பது அந்த வங்கியின் பெயர். பெரிய கோவிலில் இருந்துள்ளது. இவ்வங்கியில் காசும் நெல்லும் முதலீட்டுப் பொருட்களாக இருந்துள்ளன.
இந்த வங்கியில் இருந்து ‘பெருநங்கை மங்கலம்’ என்னும் ஊரின் சபையார் கடன் பெற்றுள்ளார்கள். அதற்காக ஒரு ஆண்டுக்கு ஒரு காசுக்கு முக்குறுணி நெல்லை வட்டியாகச் செலுத்தியுள்ளனர்.
இது தவிர, நாட்டுப் பண்டாரம், ஊர்ப் பண்டாரம் என்று இரு வங்கிகள் பெரிய கோவிலிலேயே இருந்துள்ளன. ஊர்ப்பண்டாரம் கோவில் செலவுகளுக்குக் காசு கொடுத்து வந்தது. நாட்டுப் பண்டாரம் சமுதாயச் செலவுகளுக்குக் காசு கொடுத்து வந்தது. கோவில் கோவில் சொத்து வேறு பணிகளுக்குத் திருப்பிவிடப்படவில்லை.
கோவிலில் வேலை செய்யும் பரிசாரகர்கள் முதலானவர்களுக்கு ஊள்ளூர்ப் பண்டாரத்தில் இருந்து ஊதியம். பண்டாரங்களை ( வங்கிகளை) நிர்வகிக்கும் அரசு ஊழியர்களுக்கு நாட்டுப் பண்டாரத்தில் இருந்து ஊதியம் என்று வகுத்திருந்தார் ராஜராஜன்.
இவை தவிரவும் மன்னன் ராஜராஜன் ‘இராஜராஜதேவர் பண்டாரம்’ என்று இன்னொரு வங்கியை வைத்திருந்தார். அதிலிருந்து பெரிய கோவில் மூர்த்திக்கு நிவந்தங்கள் செய்துள்ளார்.
ஒரு கணக்கும் இன்னொரு கணக்கும் ஒன்றொடொன்று தொடர்பில்லாமல், எந்தச் சிக்கலும், குழப்பமும் இல்லாமல் மாமன்னர் ராஜராஜன் அருளாட்சி செய்துவந்துள்ளார்.
மாமன்னன் இராஜராஜனுக்கு பிள்ளையாருக்கு வாழைப்பழங்கள் நைவேத்யம் பண்ண ஆசை.
ஒரு நாளைக்கு 150 பழங்கள் தேவை. ஆண்டுக்கு (x360) = 54,000. ஒரு காசுக்கு 1200 வாங்கலாம்.
360 காசுகளைக் கோவில் பண்டாரத்தில் வைப்பு நிதியாக வைக்கிறான். பண்டாரத்தார் அப்பணத்தை வட்டிக்கு விடுகின்றனர். 12.5% வட்டி.
வணிகர்கள் பண்டாரத்திடம் கடன் வாங்குகின்றனர். வட்டியாக வாழைப்பழம் கொடுக்கின்றனர். 60 காசுகள் கடன் பெற்ற வணிகர் வட்டியாக 7.5 காசு (9000 பழங்கள்) கொடுக்கிறார். நாளொன்றுக்கு 25 பழங்கள் அளிக்கிறார். இப்படியாக வணிகர்கள் தங்கள் வணிகத்துக்குக் கடன் பெற்று, வட்டியை வாழைப்பழமாக அளிக்கின்றனர்.
இராஜராஜனின் அசல் பணமும் கரையவில்லை, வட்டி மூலம் பிள்ளையாருக்குப் பழம் கிடைக்கிறது, பழம் உற்பத்தி செய்வோர் பலன் பெறுகின்றனர், வாழைப் பழத்தின் விலையும் ஒரு காசுக்கு 1200 என்று ஸ்திரமாக இருக்கிறது. (Inflation எல்லாம் இல்லை).
வட்டி விகிதம் முதற்கொண்டு வெளிப்படையாகப் பொறித்து வைத்திருந்தது அவனுடய அரசு.இது நிதி மேலாண்மை, நிர்வாகம், அறம் மூன்றும் தளும்பிய அரசு. நமது மூதாதை இராஜராஜனின் அரசு.
மற்றோன்று:
குந்தவைப் பிராட்டிக்கு மருத்துவமனை நிறுவ ஆசை. ‘இராஜகேசரி சதுர்வேதி மங்கலம்’ என்னும் ஊரின் சபையோரிடம் இடம் கேட்கிறாள். 9 மா நிலத்தை 70 காசுகள் பெற்றுக் கொண்டு விற்கிறார்கள். தனது தந்தையின் பெயரில் ‘சுந்தர சோழ விண்ணகர ஆதுல சாலை’ என்னும் பெயரில் மருத்துவமனை அமைக்கிறாள்.
மருத்துவமனைக்கு ‘வைத்திய போகமாக’ இன்னும் கொஞ்சம் நிலம் அளிக்க எண்ணுகிறாள் குந்தவைப் பிராட்டி. அதே கிராமத்தில் ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி, ‘சவர்னன் அரையன் மதுராந்தகன்’ என்பவனுக்கு அளிக்கிறாள். அவனும் அவனது வம்சத்தினரும் ஆதுலசாலையைப் பராமரிக்கவே இந்த நிவந்தம் என்று சாசனம் எழுதி வைக்கிறாள்.
இந்தக் கல்வெட்டுகள் பாபனாசம் வட்டம் இராஜகிரிக்கு அருகில் உள்ள கோவில் தேவராயன் பேட்டை சிவாலயத்தில் உள்ளன.
குந்தவை இந்த நிவந்தங்களை அளித்த போது ஆட்சியில் இருந்தது இராஜராஜனின் புதல்வன் இராஜேந்திரன். குந்தவை அவனுக்கு அத்தை முறை. நினைத்திருந்தால் நிலத்தை அபகரித்து அளித்திருக்கலாம். ஆனால் அவள் பணம் கொடுத்து வாங்கி அளிக்கிறாள்.
பின்னர் இராஜராஜனின் பேரன் வீரராஜேந்திரன் திருமுக்கூடல் திருமால் ஆலயத்தில் ஒரு பள்ளியையும், மருத்துவமனையையும் அமைக்கிறான். ‘வீரசோழ ஆதுல சாலை’ என்னும் பெயரில் இயங்குகிறது. 15 படுக்கைகள் இருந்துள்ளன. அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது. செவிலியர்கள் இருந்துள்ளனர். இத்தனைக்கும் வீரராஜேந்திரன் நிவந்தம் அளிக்கிறான். மருந்துகள் அனைத்தும் ஆயுர்வேத மருந்துகள். (19 மருந்துகள் உள்ளன. கோமூத்ர ஹரிதகி என்னும் மருந்தும் இருந்துள்ளது).
இதுவே சோழப்பேரரசு. நமது முதாதைகளின் அருளாட்சி நடைபெற்ற அருளரசு.
கருவூர்த்தேவர் இயற்றிய பாடல்கள் மூலம் தஞ்சாவூரில் மாட மாளிகைகள், கல்லூரிகள், ஆடல் தளங்கள்/அரங்கங்கள், சோலைகள் இருந்தன என்று தெரிகிறது.
ஆக, அப்படிப்பட்ட ஏதோ பெரிய மாளிகையில் தான் ராஜராஜன் இருந்திருக்க வேண்டும். மாளிகை என்னவானது? அரங்கங்கள் என்னவாயின? பெரிய கோவில் தவிர வேறு பெரிய கட்டடங்கள் காணக் கிடைக்கவில்லையே என்னும் ஐயம் நம்மில் பலருக்கு இருக்கலாம்.
இராஜராஜன் காலம் முடிந்தபின் தஞ்சாவூர் சோபிக்கவில்லை. இராஜேந்திரன் கங்கைகொண்ட சோழபுரம் கட்டினான். அங்கே தங்கியிருந்தான். பழையாறை, ஆயிரத்தளி என்னும் நந்திபுரம் முதலியன ஏற்றம் பெற்றன. மன்னர்கள் இவ்விடங்களில் அர்ண்மனைகள் கட்டிக்கொண்டு வாழ்ந்துவந்தனர்.
ஆனால், தஞ்சை மாளிகைகள் எப்படி அடியோடு அழிந்தன? அந்தக் கொடுமையைக் கேளுங்கள்.
பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் சோழ நாட்டைத் தாக்கினான். அவனை இராஜராஜன் பின் வந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் இருமுறை வென்று அடக்கினான். ஆனாலும் குலசேகரன் விடவில்லை. மூன்றாம் முறையாகப் படையெடுத்து வந்தான். மட்டியூர், கழிக்கோட்டை என்னும் ஊர்களில் போர் நடந்தது. பாண்டியன் தோற்று ஓடினான்.
குலோத்துங்கன் விட்டிருக்கலாம். ஆனால் பாண்டியரின் திமிரை அடக்க எண்ணி மதுரையைத் தீக்கிரையாக்கினான். மீனாட்சியம்மன் கோவிலை மட்டும் விடுத்து அனைத்து மாளிகைகளையும் அழித்தான். மதில் சுவர்களும் போயின. பின்னர், பாண்டியனின் சபையை இடித்துத் தரைமட்டமாக்கி, அந்த இடத்தில் கழுதையைக் கொண்டு உழுது வரகு விதைத்தான். இவ்வாறாகத் தனது ஆத்திரத்தைத் தணித்துக் கொண்டான்.
மூன்றாம் குலோத்துங்கன் இறந்த பிறகு அப்போதைய பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோழ நாட்டைத் தாக்கி, உறையூர், தஞ்சாவூர் இரண்டையும் ஒவ்வொரு கட்டடமாகத் தீயிட்டு அழித்தான்.
சோழன் செய்ததையே இவனும் செய்தான். தஞ்சையின் அரண்மனையை இடித்துத் தரைமட்டமாக்கி கழுதை கொண்டு உழுது வரகு விதைத்தான்.
அதற்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பு கரிகாற் சோழன் கட்டி உருத்திரங்கண்ணனார் என்னும் புலவருக்குப் பரிசாகக் கொடுத்த பதினாறுகால் மண்டபம் ஒன்று மட்டும் இடிக்கப்படவில்லை. இந்தச் செய்தி திருவெள்ளறைக் கல்வெட்டில் இருக்கிறது.
சோழ நாட்டின் தஞ்சாவூரின் மதில்கள், மாட மாளிகைகள் 368 ஆண்டுகள் நின்றிருந்தன.
சோழ, பாண்டிய மன்னர்களுக்கு இடையே ஒரு ஒற்றுமை உண்டு. இருவரும் வெறிபிடித்து கட்டடங்ளையும் மாளிககளையும் அழித்தனர். ஆனால் இருவரும் கோவில்களை அழிக்கவில்லை.
அதனைப் பின்னர் வந்த முகமதியத் தளபதிகள் செய்தனர். தற்போது நமது அரசின் அதிகாரிகளும் ‘திருப்பணி’ என்னும் பெயரில் சில ஆர்வலர்களும் செய்கின்றனர்.
One thought on “‘தஞ்சாவூர்’ – நூல் வாசிப்பனுபவம்”