பேராசிரியர் மோனியர் வில்லியம்ஸ் சம்ஸ்க்ருதம்-ஆங்கிலம் அகராதி எழுதினார். இன்றும் அது ஒரு முன்னுதாரண நூலாக உள்ளது.
பேராசிரியர் ஜூலியஸ் லிப்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஹிந்துமதம் மற்றும் உலக மதங்கள் பிரிவின் தலைவராக விளங்கினார். சம்ஸ்க்ருதத்தில் விற்பன்னர். ஶ்ரீபாஷ்ய காலக்ஷேபம் பண்ணினவர். ராமானுஜர் வழியாக இந்தியத் தத்துவம் பற்றிப் பலமுறைகள் பேசியுள்ளார். இவருடன் ஒருமுறை ஆழ்வார் பாசுரங்கள் குறித்து சிங்கப்பூரில் உரையாடியுள்ளேன். தமிழ் புரியும் ஆனால் பாசுரங்களைப் படிக்கும் ஆற்றல் இல்லை என்று வருத்தப்பட்டார்.
பேரா.ராப்ர்ட் லெஸ்டர் என்பார் ராமானுஜரே கதி என்று கிடந்தார். இராமானுஜரை இரண்டு விஷயங்களுக்காகப் பயின்றேன் – 1. அவர் ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைத் தனது தத்துவத்தின் மூலமாக வளர்த்ததெப்படி என்று அறிந்துகொள்வதற்காக. 2. அவரது தத்துவம், கைங்கர்யங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த விதம் மூலமாக யோகம் குறித்து அறிந்துகொள்வதற்காக என்கிறார். Ramanuja on the Yoga என்றொரு நூல் இயற்றியுள்ளார்.
பேராசிரியர் ஃபிரான்ஸிஸ் சேவியர் க்ளூனி என்பார் ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இறையியல் துறைப் பேராசிரியர். தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் விற்பன்னர். ராமானுஜ சம்பிரதாயம் பற்றி நெகிழ்வுடன் பேசுகிறார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இவரின் தலைமையில் ஶ்ரீமத் ராமானுஜர் பற்றி ஒருமுறை உரையாற்றினேன். ‘நான் கல்வியால் விசிட்டாத்வைதத்தை அறிந்துள்ளேன். ஆனால், நீங்கள் எல்லாரும் பிறவியிலேயே ஶ்ரீவைஷ்ணவர்கள், பாக்கியவான்கள்’ என்று அன்றைய தினம் பேசினார் அப்பேராசிரியர்.
இவர்களாலெல்லாம் சம்ஸ்க்ருத்மோ, அம்மொழி கற்பிக்கும் சம்பிரதாயங்களோ அழிந்துவிடவில்லை.
தமிழகத்தில் நீதியரசர் மு.மு.இஸ்மாயில் போன்ற கம்பராமாயண ஆய்வாளர் தற்போது இல்லை. அவர் ஆய்வு செய்ததால் கம்பராமாயணம் காணாமல் போகவில்லை.
பேராசிரியர் ஃபெரோஸ் கான் சம்ஸ்க்ருதம் கற்பித்தால் குடிமுழுகிவிடாது. அவர் குடமுழுக்கோ, சம்ப்ரோக்ஷணமோ பண்ணிவைக்கப் போவதில்லை. மொழிப்பாடம் நடத்தப் போகிறார். அவ்வளவுதான்.
நமது சம்பிரதாயத்தை நித்யானந்தாக்களிடம் இருந்து காக்க வேண்டுமே தவிர ஃபெரோஸ் கான்களிடம் இருந்து அல்ல.
#FerozeKhan #IT-BHU
Leave a comment