ராமன்

‘என்னங், ஒங்கள தேடிக்கிட்டு நாமம் போட்ட பெரியவர் ஒருத்தரு வந்திருக்காருங்’ சுபா சொன்னாள்.

‘என்னையா? எப்ப வந்தாப்டி? ‘ மில்லில் ஒரு பஞ்சாயத்து. வேப்பம்புண்ணாக்கு வாங்கிச் சென்ற கம்பெனி பணம் அனுப்பவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையில் இருந்த குமாரக் கவுண்டர்  ஏறிட்டுப் பார்த்துக் கேட்டர்.

‘காலம்பற நீங்க மில்லுக்கு கெளம்பின சுருக்குல வந்துட்டாப்டி. ஊட்டு வாசல்லயே உக்காந்திருக்காப்டி. எளுவது வயசு இருக்கும்ங்’

‘சாப்ட எதாச்சும் குடுத்தியாம்ணி? ஐயரா’

‘ஐயரில்லீங். நாம பெருசா போட்டிருக்காங்க. அழுக்கு வேட்டி. ரண்டு நாளா சாப்டல்லியாம். இட்லி சாப்டறீங்களான்னேன். உங்கள பார்த்துப் பேசிப்புட்டு சாப்பிடறேன்னாங்க’ சுபா மூச்சிறைக்கப் பேசி முடித்தாள்.

‘அட கெரகமே. ரண்டு நாளா சாப்டல்லியா? டீத்தண்ணியாச்சும் குடுத்தியா?’ 

‘குளிச்சு, சாமி கும்புட்டுத்தான் டீயுங்கோட குடிப்பாங்களாம். அதான் உங்கள கூட்டிக்கிட்டுப் போக வந்தேனுங்’ 

‘இத பத்து நிமிஷத்துல வந்துடறேன். நீயி போயி சோறு ஆக்கி எல போட்டு வையி’.

 குமாரக் கவுண்டர் மனம் அல்லலில் திளைத்தது. ‘யாரா இருக்கும்? நாமம் போட்ட ஆளு இப்பத்தான் ரண்டு மாசம் முன்னாடி மெட்றாசுலேர்ந்து வந்து ஜீயர் பிருந்தாவனத்தப் பார்த்துட்டுப் போனாப்ல. ஆனா, வயசு எளுபது இல்லையே.’

‘வேப்பம்புண்ணாக்கு நம்முது செயற்கை ஒரம் எதுவும் இல்லாத வர்றதுங்க. நீங்க சொல்ற வெலைக்கு ரசாயன புண்ணாக்கு தான் கெடைக்கும். நம்முது நல்லதுன்னு விகடன்ல பேட்டியெல்லாம் பார்த்திருப்பீங்க இல்ல?’ பேசிக்கொண்டிருந்தாலும் நாமக்காரர் மட்டுமே மனம் முழுதும் வியாபித்திருந்தார். 

‘ஒண்ணு செய்யுங்க. அடுத்த வாரம் வாங்க, கட்டுப்படி ஆகுமான்னு பார்க்கறேன்’ என்று வந்தவர்களை அனுப்பி வைத்துவிட்டு  ஸ்பிளெண்டரில் கிளம்பினார் குமாரக் கவுண்டர்.

ஆள் சுமார் ஆறடி இருப்பார். மெல்லிய கரிய தேகம். நெற்றியை மறைக்கும் திருமண். 

‘ஆருங் நீங்க? எங்கிருந்து வர்றீங்க?’ 

‘ஆங்., இப்பத்தான் கொஞ்ச நேரம் முன்ன வந்தேன்’ 

‘காது கேக்கல்லீங்க. சத்தமாப் பேசுங்க’ சுபா சமிக்ஞை காண்பித்தாள். 

எத்தனை கத்திப் பேசியும் அவருக்குப் புரியவில்லை. 

‘தமிழ் படிக்க தெரியுமா?’ கவுண்டர் பேப்பரில் எழுதிக் காண்பித்தார்.

‘நல்லா தெரியும். காதுதான் கேக்காது’ பெரியவர் சொன்னார். கணீரென்ற குரல்.

‘எங்கிருந்து வரீங்க? என்னைய எப்பிடித் தெரியும்?’ மீண்டும் எழுத்து. 

‘விகடன்ல உங்க பேட்டிய படிச்சேன். உங்க நம்பர் கெடைச்சுது. பார்க்கணுமுன்னு தோணிச்சு. பார்க்க வந்தேன்’ ஏதோ உறவுக்காரர் போல் அண்மையில் பேசினார்.

கவுண்டருக்கு ஒன்றும் பேசத் தோன்றவில்லை.

‘சார், கம்ப ராமாயணத்துக்கு நல்ல உரை எதுங்க?’ இரண்டு மாதங்கள் முன்னர் சென்னையில் உள்ள என்னை அழைத்துக் கேட்டிருந்தார். 

‘அட, நீங்களும் கம்பனுக்குள்ள வந்துட்டீங்களா? நல்லது. வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை நல்லது. உங்க மன நிலைக்கு ஏத்த மாதிரி இருக்கும். ஆமா, என்ன திடீர்னு?’ 

’24ம் பட்டம் அழகியசிங்கர் பிருந்தாவனத்த கண்டு பிடிச்சதுலேர்ந்து என்னவோ வைஷ்ணவ சம்பந்தமாவே இருக்குங்க. போன வருஷம் ஜீயர் வந்து ஆசீர்வாதம் செஞ்சாரு.  நீங்க வந்து பிருந்தாவனம் தரிசனம் பண்ணினீங்க. என்னமோ வைஷ்ணவ தொடர்பு ஏற்பட்டுக்கிட்டே இருக்கு’

கொக்கராயன் பேட்டையில் அஹோபில மடத்தின் 24ம் பட்டம் அழகியசிங்கரின் பிருந்தவனம் இருந்ததைக் குமாரக் கவுண்டரும் அவரது உறவினர்களும் கண்டுபிடித்து, அப்போது சிங்கப்பூரில் இருந்த என்னிடம் ‘என்னவோ நாமம் எல்லாம் இருக்குங்க. இது என்னன்னு பாருங்க’ என்று படங்களை அனுப்பியிருந்தனர். திருமண் அஹோபில மடத்தின் பாணியில் இருந்ததைக் கண்டு மடத்துடன் தொடர்புகொள்ளச் சொல்லியிருந்தேன். பின்னர் துரித கதியில் வேலைகள் நடந்து, கொக்கராயன் பேட்டையில் 1776ல் திருநாட்டை அலங்கரித்த 24ம் பட்டம் ஜீயரின் பிருந்தாவனம் புனருத்தரணம் செய்யபப்ட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் நான் சென்று தரிசித்து வந்திருந்தேன்.

‘கம்ப ராமாயணம் புஸ்தகம் கேட்டீங்களே. என்ன செஞ்சுக்கிட்டு இருக்கீங்க?’ ஒரு மாதம் முன்னர் அவரிடம் கேட்டிருந்தேன்.

‘அதை ஏன் கேக்கறீங்க. இப்பல்லாம் தினமும் பாராயணம் பண்றேன். பொறவு தான் தெரிஞ்சுது, எங்க மூத்த அய்யா கம்ப ராமாயணம் வாசிச்சவராம். அவர் காலத்துல அதுலேர்ந்து கதையெல்லாம் சொல்லுவாராம்,’ என்றார்.

‘ஏதோ பூர்வ புண்ணிய வாசனை இல்லாம கம்பன் வர மாட்டானேன்னு நினைச்சேன்’ என்றேன்.     

‘இப்ப எதுக்கு என்னப் பார்க்க வந்திருக்கீங்க?’ குமாரக் கவுண்டர் பேப்பரில் எழுதிக் காட்டினார்.

‘ பார்க்கணும்னு தோணிச்சி, வந்தேன்’

‘என்ன விஷயமா?’ 

‘நீங்க எனக்கு வேலை கொடுங்க. நான் இங்கேயே தங்கிக்கறேன்’ 

’70 வயசுல வேலையெல்லாம் வேணாமுங்க. நீங்க வேண்டிய மட்டும் தங்கிக்கோங்க’ குமாரக் கவுண்டருக்கு இவரது பின்புலத்தை ஆராய வேண்டும் என்று தோன்றியது.

‘நீங்க மொதல்ல சாப்பிடுங்க. பொறவு பேசிக்கலாம்.’

‘குளிக்கணும். அப்புறம் திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி சொல்லணும். அப்பறம் தான் சாப்பாடு’ பெரியவர் தீர்மானமாகச் சொன்னார்.

‘இங்க கொஞ்சம் வரீங்களா? எனக்கு புஸ்தகம் வேணும்’ பெரியவரின் குரல். 

 தீர்த்தமாடி, திருமண் தரித்துக் கொண்டிருந்த பெரியவரைக் கண்ட குமாரக் கவுண்டர் பெருமாளின் விஸ்வரூபத்தைக் கண்டதை போல ஒரு சிலிர்ப்பை உணர்ந்தார்.

‘உங்களத்தானே, எனக்கு புஸ்தகம் வேணும்’ பெரியவர் மீண்டும்.

‘ஆங்.. என்ன புஸ்தகம்?’ தன் நினைவிற்கு வந்தவரான கவுண்டர் சைகை காண்பித்துக் கேட்டார்.

‘திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி புஸ்தகம் வெச்சிருந்தேன். காணல. உங்க வீட்டுல இருக்கா?’ 

ஏதோ தெய்வ உத்தரவு போல் தோன்ற குமரக்கவுண்டர் புஸ்தகம் வாங்கிவர ஆள் அனுப்பினார். ஈரோட்டில் பிரபந்தம் கிடைத்தது.

சாப்பிட்டு முடித்தபின் ஒரு தட்டில் பழம், வெற்றிலை, பாக்கு வைத்து, ஒரு புது வேஷ்டி, அங்கவஸ்திரத்தையும் கொடுத்துப் பெரியவரை நமஸ்கரித்த கவுண்டர், ‘நமக்கு எந்தூருங்க?’ என்றார்.

‘விழுப்புரம் பக்கத்துல கிராமம். பல ஏக்கரா நஞ்சை உண்டு. எல்லாத்தையும் பையன் பேர்ல எளுதி வெச்சுட்டேன். மருமகளோட பிரச்னை. அதான், நாலு வருஷமா நூத்தியாறு திவ்ய தேசத்தையும் ரெண்டு தடவை பார்த்துட்டேன். அடுத்தது பரமபதம் தான். எப்பன்னு தெரியல’ 

தினமும் காலை நான்கு மணிக்கு எழுந்து, கொக்கராயன் பேட்டை காவிரியில் குளித்து, திருமண் இட்டுக்கொண்டு ஐந்து மணிக்கெல்லாம் திருப்பாவை பாடுவது என்று ஒரு வாரம் கழிந்தது.

எத்தனை முறை கேட்டாலும் தனது விலாசத்தைக் கொடுக்க மறுத்த பெரியவர், வேறு எதுவும் பேசவில்லை. எப்போதும் பிரபந்தமும் கையாகவுமே இருந்தவர் குமாரக் கவுண்டரின் குழந்தகளுடன் மட்டும் ஏதோ பேசிக்கொண்டே இருந்தார். தனது பேரக் குழந்தைகளுடன் பேசுவதாக நினைத்துக் கொண்டார் போல.

வந்த எட்டாவது நாள் அவரது பிரபந்த புஸ்தகத்தில் ஒரு செல்ஃபோன் எண் போல் இருந்த இலக்கங்களைக் குமாரக் கவுண்டர் தொடர்புகொள்ள முயல, ‘ஆங், இப்ப எந்தூர்ல இருக்காரு? அப்பப்ப வீட்ட விட்டு ஓடிடுவார். எப்படியோ எதாவது வைஷ்ணவ கோவில்ல போய் உக்காந்துடுவார். யாராவது இப்பிடி கண்டு பிடிச்சு அனுப்புவாங்க,’ என்ற மருமகள், மறு நாள் டொயோட்டா இன்னோவாவில் வந்து சேர்ந்தார்.

‘அப்பா, வாங்க வீட்டுக்குப் போகலாம்’ என்று மருமகள் சொல்ல, ‘வந்துட்டியா? பெருமாள் என்ன நிம்மதியா இருக்க விட மாட்டானே’ என்ற பெரியவரிடம் குமாரக் கவுண்டர் ‘சாமி, நீங்க வீட்ட விட்டு வெளில போகாதீங்க. எப்பவாவது வெளில போகணும்னு நினைச்சா, எனக்கு சொல்லி அனுப்புங்க. நான் வந்து அழைச்சுக்கிட்டு வரேன்’

வண்டியில் ஏறி அமர்ந்துகொண்ட பெரியவரைக் கும்பிட்டபடி நின்றிருந்த குமாரக் கவுண்டர் கை காட்ட, சுபா ஒரு தட்டில் கற்பூரம் ஏற்றி வண்டியின் முன் சென்று காட்டினாள். 

வண்டி சென்ற பின் நெடு நேரம் அந்தத் திசையையே பார்த்துக் கொண்டிருந்த கவுண்டரிடம் சுபா ‘வந்தவரு பெரிய மனுஷர் போலைங்க. காருக்கு முன்னாடி நம்பர் பிளேட் இருக்குமில்லைங்க, அங்க ‘ராமசாமி ரெட்டியார், ஜமீந்தார்’னு எளுதியிருந்திச்சு’ என்றாள்.

‘சார், கம்ப ராமாயணம் படிக்கறேனான்னு ராமனே வந்து பார்த்துட்டுப் போனான்’ என்றார் குமாரக் கவுண்டர், தொலைபேசியில்.

4 thoughts on “ராமன்

  1. உண்மைச் சம்பவம்தான்.. ஒரு உத்தமமான பாகவதரின் தரிசனம், பழகும் வாய்ப்பு.. ஏதோ முன்னோர்கள் செய்த புண்ணியம்.. ஆமருவி ஐயா போன்ற சாத்வீகர்களின் நட்பின் பலன்..

    Like

    1. நன்றி ஐயா.நீங்கள் தான் உண்மையான பாகவதர். அதனாலேயே பல நல்ல அனுபவங்கள், நற்பலன்கள் ஏற்படுகின்றன. உங்கள் தொண்டு வாழ்க. ‘அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ’.

      Like

Leave a comment