பொம்யூனிஸ்ட் ஆவது எப்படி ?

‘தோழர், உருசியாவுக்கு எதிரா ஒரு போராட்டம் செய்யணுமே, கட்சி ஒண்ணுமே பேசலியே.’

‘என்ன கண்றாவியா இது உருசியா? யார் அந்தப் பொண்ணு?’

‘தோழர், பொண்ணு இல்லீங்க. நம்ம ஃபாதர் லேண்ட – தந்தை நாடு. இப்ப கூட போருக்குப் போயிருக்கே’

‘யோவ், ரஷ்யான்னு சொல்ல வேண்டியது தானே, இதென்ன புது கொழப்பம்?’

‘இல்ல தோழர். கூட்டணில அப்படித்தான் சொல்றாங்க. இன் ஃபாக்ட் ‘கரவொலி’ நாளேட்டுல ‘கழுத்தறுப்பே’ கட்டுரைல கூட அப்பிடித்தான் சொல்லியிருக்காங்க..’

‘அட நாசமாப் போக. அடக்கிப் பேசுய்யா. புதுசு புதுசா கொழப்பாத. கரவொலில சொல்ற மாதிரி நடந்துக்கறதுதான் பொம்யூனிஸ்டு கொள்கைன்னு நமக்குத் தெரியும், ஆனா அந்த நாட்டுக்கு இப்பிடி ஒரு பேரு வெச்சிருக்கோம்னு புதினுக்கு தெரிஞ்சா அடுத்த மாசம் சம்பளம் கட் ஆயிரும். என்ன கருமாந்தரமோ வீட்டுக்குள்ள பேசிக்கோ. கட்சி ஆஃபீசுல சொல்லாத’

‘சரி தோழர். சம்பளம் வராதுன்னு புரியுது. ஆனா, போராட்டம் பண்ணி நாளாச்சே. நம்ம கொள்கைக்கு எதிரா பலதும் நடக்கற போது என்ன செய்யிறது?’

‘என்ன பொம்யூனிஸ்டோ போ. நல்லகண்ணு கூடதான் மதுக்கடைகள மூடியே ஆகணும்னு மே 5க்கு முன்னாடி வரை சொன்னாரு. இப்ப அதப்பத்திப் பேசறாரா என்ன? பேசினா கறிவாலயத்துலேர்ந்து சாப்பாட்டு அலவன்ஸ் வராது. சமயத்துக்கு தக்கபடி வாய மூடிக்கறது தான் பொம்யூனிஸம்னு தெரியாதா ஒனக்கு? தாஸ் கேப்பிடல் படிச்சியா இல்லியா?’

‘தோழர், அதப் படிச்சுத் தான் இப்பிடி ஆயிட்டேன் போல. அதால இப்பல்லாம் கரவொலி மட்டும் தான் படிக்கறது’

‘அப்ப நம்ம சனசக்தி, பூக்கதிர் இதெல்லாம்?’

‘அது யாருங்க பூக்கதிர்? புதுசா கட்சில மகளிர் அணில சேர்ந்திருக்காங்களா ?’

‘அட கண்றாவியே. நாமெல்லாம் பொம்யூனிஸ்டு தம்பி. ஆண், பெண் வித்யாசம் எல்லாம் பேசக் கூடாது. இதென்ன மகளிர் அணி? அதெல்லாம் கூட்டணிக் கட்சிகள்ல தான் அப்பிடியெல்லாம். இங்க நாம எல்லாரும் ஒண்ணுதான். என்ன பொம்யூனிஸம் படிச்சியோ தெரியல’

‘போகட்டும் விடுங்க தோழர். இப்ப போராட்டம் ஒண்ணுமே இல்லியே. ஒரு எட்டு வழி எதிர்ப்பு, கூடங்குளம் எதிர்ப்பு, சேது சமுத்திரம் ஆதரவு, எண்ணூர் அனல் மின் நிலையம் எதிர்ப்பு.. என்ன கழுதையாவுது தலைப்பு குடுங்க. ரோட்டுல கொடி பிடிச்சிட்டு போகணும்னு கை நம நமங்குது’

‘மெதுவா பேசுய்யா. நமோ நமோன்னு கூட்டணி காதுல விழுந்தா அடுத்த மாசம் பேட்டாவுல கைய வெச்சுடுவாங்க. அது சரி. இப்ப என்னெழவுக்கு போராட்டம் பண்ணனும்னு துடிக்கற?’

‘தோழ்ர், நம்ம கொள்கைன்னு ஒண்ணு …’

‘தோ பாரு. எட்டு வழிச் சாலை வேணாம்னு போராடினோம். இப்ப அதைப் பத்திப் பேசறதில்ல. ஏன்? நமக்கு கூட்டணிங்கற காண்ட்ராக்ட். கூட்டணிகாரங்களுக்கு அது வேற காண்ட்ராக்ட். அதுபோல தான் கூடங்குளம்ல வாய மூடிப்போம். ஏன்னா அது ஃபாதர் லாண்ட் பணம். ஆனா நியூட்றினோ விஷயம் அப்பிடி இல்ல. அதுல அமெரிக்கா இருக்கு. அதால அத எதிர்க்கறோம்.. அதுவே ‘டாஸ்மாக் மூடணும்’ னு சொல்ல மாட்டோம். எதாவது ஏடாகூடமா நடந்தா ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ னு மய்யமா அறிக்கை விட்டுட்டு அடுத்த இன்ஸ்டால்மெண்ட் போட்டாச்சான்னு ஏ.டி.எம்.ல போயி நிக்கணும்.

அது மட்டுமா? முல்லைப் பெரியார் அணை உயரத்த உயர்த்தணும்னு உரக்கச் சொல்லாம, பேப்பர்ல எட்டாவது பக்கத்துல சின்னதா வர்ற மாதிரி செய்தி போடணும். ஏன்னா, பினரயிக்கு தெரிஞ்சா ஆள வெச்சு அடிப்பாரு.

ஏர்போர்ட்ட அதானிக்கு வித்தாரு மோதின்னு ஒப்பாரி வெக்கணும். அதுவே, கேரளாவுல டெண்டரே இல்லாம அதானிக்கு குடுத்த விஷயத்த பேசவே கூடாது. தெரியாத மாதிரியே இருக்கணும்.

‘என்ன தோழர். நம்ம கொள்கை என்ன? வர்க்கப் போராட்டம், உலக உழைப்பாளர்களே ஒன்றுபடுங்கள், உங்கள் சங்கிலிகளை உடைத்தெறியுங்கள்..இப்பிடி எதாவது..’

‘தம்பிக்கு மனசு சரி இல்லையா? என்னவோ தாக்கு தகவல் இல்லாம பேசறியே’

‘தோழர், இதெல்லாம் நம்ம பொம்யூனிஸ வகுப்புல நீங்க தானே சொன்னீங்க? ‘

‘ஓ அதுவா. இது.. ஆமா.. சரிதான். எனக்கே எங்கியோ கேட்டமாதிரி இருக்கு, நல்லவேளை ஞாபகப்படுத்தினே’

‘தோழர், நல்லவேளை நீங்க ஸ்டாலின், மாவோவெல்லாம் இன்னும் மறக்கல்ல..’

‘எப்பிடி மறக்க முடியும் தோழர். முதலமைச்சர் இல்லியா? அதோட போன எலக்‌ஷன்ல 25 சி கொடுத்தவங்களாச்சே’

‘தோழர்.. என்னாச்சி தோழர்? சரி போகட்டும். இப்ப, அடுத்த போராட்டம் எதாவ்து பண்ணியே ஆகணும்.’

‘அப்ப ஒண்ணு பண்ணுங்க. ‘உக்ரைன் போரை நிறுத்தாத ஃபாஸிச மோதி அரசைக் கண்டிக்கிறோம்’ அப்பிடின்னு அறிக்கை விட்டு அடையாள உண்ணாவிரதம் இருக்கலாம். ரஷ்யப் பாட்டாளிகளை போர் தொடுக்க விடாமல் செய்யும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அரை மணி நேரம் சாகும் வரை உண்ணா விரதம்னு அறிவிச்சு சரவண பவன் பக்கத்துல உக்காந்துக்கலாம். இப்பிடி பல போராட்ட ஐடியா எல்லாம் இருக்கு. ஆனா, பேமண்ட் வந்த பொறவுதான் செய்யணும், புரியுதா?’

‘தோழர், நீங்க சொல்றது புரியல்லியே..’

‘கரெக்ட். நான் சொல்றது எனக்கு மட்டும் புரியல்லேன்னு நினைச்சேன். உனக்கும் புரியல்லியா. உண்மையான பொம்யூனிஸ்ட்யா நீயி’

‘காஃபி போட்டாச்சு. பல் தேச்சுட்டு வாங்கோ. கனவை நாளைக்கி கண்டினியூ பண்ணிக்கலாம்’ குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான் ஆமருவி.

Leave a comment