கிருபானந்த வாரியாருக்கு நடந்தது..

கிருபானந்த வாரியாருக்கு நடந்தது இது தான்.

நெய்வேலி ஸத்-ஸங்கத்தில் வாரியார் ஸ்வாமிகளின் உபன்யாசம். அன்று ஸ்வாமிகளுக்குக் கடும் ஜூரம். சொற்பொழிவை ஓரிரு நாட்களுக்கு ரத்து செய்துவிடலாமா என்று ஸத்-ஸங்கம் மணித்வீபம் கமிட்டி தலைவர் சந்திரசேகரன் கேட்டார். ( அடியேனின் ‘பழைய கணக்கு’ நூலில் ‘தரிசனம்’ கதையில் வரும் டி.ஆர்.சி. மாமா இவரே) வாரியார் ஒப்புக்கொள்ளவில்லை. ‘முடிந்தவரை சொல்கிறேன். முருகன் பார்த்துக்கொள்வான்’ என்று, அன்று மாலை உபன்யாசம் நடந்தது.

அன்றிரவு ஸ்வாமிகளுக்குக் கடும் காய்ச்சல். விடியற்காலை 2 மணி சுமாருக்கு, பல காலிகளை உள்ளடக்கிய தி.க.கும்பல் ஸத்-ஸங்கம் மணித்வீபம் வீட்டில் ஜூரத்துடன் உறங்கிக்கொண்டிருந்த வாரியார் ஸ்வாமிகளை, வீடு புகுந்து தாக்கி, அவர் வழிபடும் லிங்கம், மற்றும் அவர் கழுத்தில் இருந்த லிங்கம் இரண்டையும் கீழே போட்டுத் தாக்கி அவமதித்தனர்.

தாக்குதலினால் மேலும் உடல் உபாதைக்கு உள்ளானார் ஸ்வாமிகள்.

கூச்சல் கேட்டு பிளாக்-2ல் இருந்து, அக்கம் பக்கம் வீட்டு மக்கள் ஓடி வர, கும்பல் கலைந்தது. சுமார் 20 ஊழியர்கள் போலீசில் புகார் பதிந்தனர் ( என் தந்தையார் உட்பட).

கடலூரில் இருந்து கலெக்டர் வந்திருந்தார் என்று என் தந்தையார் தெரிவிக்கிறார்.

ஸ்வாமிகளுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நெய்வேலி நிறுவனத்தின் சைனிக் பிரிவினர் காவல் இருந்தனர்.

தன் வாழ் நாளின் இறுதி வரை ஸத்-ஸங்கம் மணித்வீபத்திற்கு அவர் எழுந்தருளவே இல்லை. ஆனால் பல முறை ஸத்-ஸங்கம் தபோவனம் வந்தார். சிறுவனாக அவரது சொற்பொழிவுகளை முதல் வரிசையில் இருந்து கேட்டுள்ளேன். தேரழுந்தூர் கம்பன் விழாவிற்கும் வந்திருந்தார். புலவர் கிரன். ஸ்வாமிகள் மற்றும் என் பெரியப்பா முதலானோர் பங்குபெற்ற கம்ப ராமாயணப் பட்டிமன்றங்கள் தற்போதும் நினைவில் உள்ளன.

தாக்குதலுக்குப் பல ஆண்டுகள் கழித்து வாரியார் ஸ்வாமிகளிடம் ஒரு பெண்மணி ‘என் கணவருக்கு சிறுநீர் பிரிவதில் பிரச்னை உள்ளது. காப்பாற்றுங்கள்’ என்று வேண்ட, ‘நீ யாரம்மா?’ என்ற ஸ்வாமிகளிடம் கண்ணீர் விட்டபடி அந்தப் பெண்மணி ‘தங்களைத் தாக்கிய கூட்டத்தில் முக்கிய பங்காளி என் கணவரே’ என்ற அழுதார். ‘முருகா’என்று வேண்டியபடி ஸ்வாமிகள் விபூதிப் பிரசாதம் அளிக்க, அதை சுத்தமான நீரில் கலந்து உட்கொண்ட குற்றவாளிக்குக் குணமானது என்று அறிந்தோம். வாரியார் ஸ்வாமிகளும் தனது சுயசரிதையில் இவற்றைச் சுட்டியுள்ளார்.

ஆக, வாரியார்க்கு நடந்தது இது தான்.

வாழ்நாளின் இறுதி முச்சு வரை, தமிழையும், முருகப்பெருமானையும் மட்டுமே பேசி வந்த ஆன்மீகச் செம்மல் வாரியார் ஸ்வாமிகளை, தமிழை வாழ வைத்ததாகச் சொல்லிக் கொள்ளும் திக சமூக விரோதக் கும்பல்கள் நடத்திய விதம் இது தான்.

இது தான் திராவிட மாடலின் லட்சணம்.

ஆனால், அதற்கான பலனையும் எம்.ஜி.ராமச்சந்திரன் மறையும் வரை வனவாசத்திலேயே கழித்தனர் திமுகவினர். ‘ராமனுக்கே 14 ஆண்டுகள் தான், எனக்கு மட்டும் இன்னும் அதிகமாக உள்ளதே’ என்றும், ‘அமெரிக்காவில் தேறிவரும் எம்.ஜி.ஆர். திரும்பி வரும் வரை நான் ஆட்சியில் இருக்கிறேன். அவர் வந்தவுடன் அவரிடமே தந்துவிடுகிறேன். என்னை ஆட்சியில் அமர்த்துங்கள்’ என்று வெளிப்படையாகக் கேட்டவர் தான் கருணாநிதி.

மீண்டும் கிருபானந்த வாரியார் நிகழ்வு நடந்தால், 14 ஆண்டுகள் மட்டும் அன்றி, 140 ஆண்டுகள் பதவியும், கட்சியும் இல்லாமல் அல்லல் பட வேண்டியது தான்.

‘அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை’

Leave a comment