மாளாபுரம் கோவில் திருப்பணி

மாளாபுரம் கோவில் திருப்பணி – ஒரு பார்வை

சனிக்கிழமை (25-03-2023) பாபநாசம் அருகே உள்ள மாளாபுரம் என்னும் அழகிய கிராமத்திற்குச் சென்றிருந்தேன். உ.வே.சா. பிறந்த உத்தமதானபுரம் இவ்வூருக்கு அருகில் அமைந்துள்ளது.

மாளாபுரம் முன்னர் திருமால்புரம் என்று இருந்துள்ளது. பின்ன மால்புரம் என்று ஆகி, தற்போது மாளாபுரம் என்று புழங்கிவருகிறது. சின்னஞ்சிறிய அக்கிரஹாரம் அமைந்துள்ள ஊரில் அமைதி ததும்பும் சூழல். எங்கும் தென்னை மரங்கள் நிறைந்து, குளம் கூட உள்ளது. முக்கியமாகக் குளத்தில் நீர் உள்ளது. மக்கள் அவசரமில்லாத ஒரு வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர்.

அந்த ஊரில் புதுக்கோட்டை மன்னர் 600 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அக்கிரஹாரம் அமைத்தார். சிவன் கோவில் ஒன்றும், லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவில் ஒன்றுமாக நிர்மாணித்தார். அக்கிரஹாரத்தாரும், ஊர் மக்களும் கோவிலைக் கவனித்துக் கொண்டனர்.

காலப்போக்கில் எல்லா அக்கிரஹாரங்களையும் போல் மாளாபுரம் அக்கிரஹாரமும் குன்றத் துவங்கியது. பெயரளவில் இன்னும் உள்ளது என்றாலும், கோவில் பாழானது.

பெருமாள், லலிதா என்றொரு பக்தையின் கனவில் தோன்றித் தன் கோவிலைப் புதுப்பிக்க உத்தரவிட்டார். லலிதா பிற வேலைகளில் இருந்ததால் முயலவில்லை. பின்னர் மீண்டும் அதே கனவு வரவே, அவர் தன் குடும்ப ஜோதிடரைத் தொடர்புகொண்டார். அவரது வழிகாட்டுதலின் பேரில் தனியொருவராகக் கோவிலைக் கட்டத் துவங்கினார்.

ஊர்க்காரர்கள் பலர் வெளியூர்களில் இருந்தாலும், ஓரளவு உபகாரமாக இருந்துள்ளனர். இந்து சமய அற நிலையத் துறையின் உத்தரவைப் பெற்ற லலிதா, கோவில் கட்டும் பணியில் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துள்ளார்.

நான் சென்ற போது மாலை 5:30 மணி. அந்தி சாயும் நேரத்தில் அந்தக் கிராமத்தின் அமைதி என்னைப் பெரிதும் ஆட்கொண்டது. வாகன இரைச்சல்கள் இல்லாத, கிளிகள், குருவிகள் கத்தும் சூழலைக் கண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்று மாளாபுரம் உணர வைத்தது.

கோவில் கட்டுவதுடன் நிற்காமல், ஊரில் உள்ள குழந்தைகளுக்குப் பஜனையும் சொல்லிக் கொடுத்துள்ளார் லலிதா அம்மையார். இந்த மாதிரியான வேற்றுலக நிகழ்வுகளில் மூழ்கியிருந்த போது ஓய்வு பெற்ற தாசில்தார் அம்மையார் ஒருவர் வந்து அறிமுகம் ஆனார். ‘நல்ல விஷயம் பண்றா லலிதா. நீங்கள்ளாரும் உறுதுணையா இருங்க’ என்று சொன்னவர், ‘We can’t take a pie when we leave this place’ என்று சொல்லிச் சென்றது ஏதோ சித்தர் வாக்கு போல் மனதில் ரீங்காகரம் இட்டவண்ணம் இருந்தது.

லலிதா அம்மையார் பல போராட்டங்களுக்கு இடையில் கோவில் நிர்மாணம் செய்து வருகிறார். கோபுர வேலைகள் பாதியில் உள்ளன. த்வஜஸ்தம்பம் முடியும் நிலையில் உள்ளது. மடப்பள்ளி வேலைகள் துவங்கியுள்ளன. சக்கரத்தாழ்வார் சன்னிதியும், ஆண்டாள் சன்னிதியும் துவங்கவுள்ளன. கூடிய விரைவில் சம்ப்ரோக்‌ஷனம் நடத்த முயன்றுவருகிறார் லலிதா அம்மையார்.

கோவிலில் எடுத்த சில படங்களை வெளியிடுகிறேன். கோவில் தொடர்பாக மேலதிகத் தகவல்கள் வேண்டுமெனில் லலிதா அம்மையாரைத் தொடர்புகொள்ளுங்கள். (+91-99520-58324). ஆ..பக்கங்கள் ஆமருவி மூலம் தெரிந்துகொண்டேன் என்று சொல்லுங்கள். எனக்கும் கொஞ்சம் புண்ணியம் வரட்டுமே.

சில படங்கள்

இந்தக் கோவில் பற்றிய எனது முந்தைய பதிவு இங்கே.

Advertisement

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: