கம்பர் பற்றிய தொடர் என்றதும் இவ்வளவு ஆதரவு இருக்கும் என்று நினைக்கவில்லை. பல பேர் இ-மெயில் அனுப்பியுள்ளார்கள். அதெல்லாம் பார்க்கும்போது கொஞ்சம் பயமாகவே இருக்கிறது. நன்றாக வர வேண்டுமே என்ற நினைப்பு ஒருபுறம், எப்போதும்போல் குரங்குத்தனம் வந்து “பகுத்தறிவு”, “புண்ணாக்கு” என்று அத் தொடரைக் கொச்சைப்படுத்தாமல் இருக்கவேண்டுமே என்ற எண்ணம் ஒரு புறம், தவறாக ஒன்றும் சொல்லாமல் இருக்க வேண்டுமே – ஏனென்றால் கம்பன் ஒரு இலக்கியவாதி மட்டுமல்ல தமிழ்ப் பண்பாட்டில் ஊறி அதன் வழியாக மனிதனைக் கடவுளாக்கியவன் – என்ற எண்ணங்கள். இப்படிப் பல.
கம்ப ராமாயணத்தை நான் எழுதப்போவதில்லை. கவிதைச் சுவையோ, சொற்சுவையோ கெடும் அளவிற்கு அவரது பாடல்களைப் பற்றி எழுதப்போவதில்லை. அதெல்லாம் ஏறகெனவே பலர் எழுதிவிட்டார்கள் என்பதால் அல்ல அந்தத் திறன் எனக்கு இல்லை என்பதால்.
ஆக என்ன எழுதப்போகிறேன் ?
கம்பனைப் பற்றிச் சிலர் எழுதியவை குறிப்பாக சாமி.சிதம்பரனார், என்னுடைய பெரிய.தகப்பனார் முனைவர்.ராமபத்ராச்சாரியார் அவர்கள் ஆற்றிய உபன்யாசங்கள் மூலம் நான் அறிந்தவை, ஆழ்வார்கள் , திருவள்ளுவர், நாயன்மார்கள் மீதுள்ள பற்றாலும் அவர்கள் எழுத்துக்களை என் சிற்றறிவுக்கு எட்டும் அளவு எனக்குப் பாடம் நடத்திய என் தமிழாசிரியர்கள் மூலம் நான் அறிந்தவை, இவை எல்லாவற்றினாலும் உந்தப்பட்டு நான் படித்து, பேசி அறிந்துகொண்டவை, எல்லாவற்றிற்கும் மேலாக கம்பனையும் ராமாயணத்தையும் குறிப்பாக இந்து மதத்தையும் கேலி பேசுவதையே பொழுதுபோக்காகக் கொண்டுள்ள “தமிழ் அறிஞர்கள்” காட்டியுள்ள சில திசைகள் — இப்படிப் பல உந்துதல்கள். இவை எல்லாம் இடம்பெறும் என்று நினைக்கிறேன்.
ஆனால் மிகப்பெரிய ஒரு உந்துதல் இருந்தது. அது நட்பு வட்டத்தில் மிகப் பலர் தொழில் துறை சார்பு இல்லாத புத்தகங்கள் படிப்பதில்லை. எனவே நமது பொக்கிஷங்கள் பற்றி அவர்கள் அறிந்திருக்க வில்லை. சில சாதாரண விஷயங்கள் பற்றிக்கூறினாலும் வாயடைத்துப் போகிறார்கள். “என்ன சார், தமிழ்லேயா இதெல்லாம் இருக்கு?” என்று கேட்கிறார்கள். சரி ஆங்கிலமாவது படிக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. இந்த டிஜிட்டல் யுகம் நம்மை மாட்டுத் தொழுவ மாடாக ஆக்கிவிட்டது என்று புரியாமலே மேலும் மேலும் நல்ல, வேகமான மாடாக இருக்க முனைகிறோம். இது இந்த யுகத்தின் சாபக்கேடு.
அவர்கள் நிலையை நினைத்து பல நேரம் வருந்தினேன். அவர்கள் படித்து வளரும் வயதில் இந்த மாதிரியான இலக்கியம், கலை, மொழி சார்ந்த சூழல் இல்லாமையாலும், வாழ்க்கையை நடத்த மட்டுமே போதுமான கல்வியே தேவையானது என்ற அறிவுறுத்தல்களாலும் அவர்கள் நமது வரலாற்றை, பொக்கிஷங்களை அறிந்திருக்கவில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் கலை என்றால் சினிமா மட்டுமே. சரியான புத்தக வாசிப்புக்கள் கூட இல்லை. அதற்கான நூலக அமைப்புகள் இல்லை. எனவே தம்மைத் தாமே அறியாத நிலை.
ஆனால் நான் வளர்ந்த நெய்வேலிச் சூழல் அலாதியானது. பொழுதுபோக்க ஒரே வழி நூலகம் தான். அது முடிந்தால் வார இறுதிகளில் வீட்டின் அருகில் அமைந்த கோவில்களில் புலவர் கீரன், கிருபானந்தவாரியார் முதலியோரின் சொற்பொழிவுகள். சொந்தத்திலேயே ஒரு பெரிய தமிழ் அறிஞர். ஆசிரியர்களோ அறிவின் ஆசான்கள். எனவே ஆழ்வாரும் , கம்பனும் ஏதோ அடுத்தவீட்டுப் பிள்ளைகள் போல் ஆனார்கள். சொந்த ஊரும் கம்பன் பிறந்த தேரழுந்துர். வீட்டில் சில நேரங்களில் ஆழ்வார் பாசுரங்கள் பற்றிய சச்சரவுகள் நடக்கும். அதுவும் பாடமே. இதெல்லாம் முன்பிறவிப் பலன் என்று மட்டுமே தற்போது அறிகிறேன்.
அப்போதெல்லாம் தேரழுந்தூரில் கம்பன் விழா நடக்கும். மு.மு.இஸ்மாயில் போன்ற பெரியவர்கள் எல்லாம் வந்திருந்து பட்டிமன்றம் நடத்துவார்கள். புரியாத வயதில் காதில் விழுந்தவை சில காலம் கழித்துப் புரிய ஆரம்பித்தபோது பிரமிப்பாக இருந்தது. புரியும் வயதில் கம்பன் விழா நின்று போனது. இப்போது நடக்கும் “பட்டி மன்றங்கள்” உண்மையில் “பட்டி” மன்றங்கள் தான் ( இந்த இடத்தில் “பட்டி”யை மலையாளத்தில் அர்த்தப்படுத்திக் கொள்ளவும் ).
இப்படி இருந்த பள்ளிப்பருவ காலத்தில் ஒரு முறை கவிஞர்.கண்ணதாசனின் “அர்த்தமுள்ள இந்துமதம்” கிடைத்தது. அதில் அவர் அறிஞர் அண்ணாவின் “கம்பரசம்” என்னும் நூலைப் பிரபலப்படுத்த மூல நூலான கம்ப ராமாயணத்தில் என்ன இருக்கிறது என்று படிக்க நேர்ந்தது. அதைப்படித்தவர் அப்படியே மாறிப்போனார். காஞ்சி பரமாச்சாரியார் “பெரிய புராணம்” முதலியன படிக்கக் கொடுத்தாராம். பின்னர் கண்ணதாசன் “அர்த்தமுள்ள இந்துமதம்” பத்து பாகம் எழுதினார் என்று படித்தேன். அப்போதிருந்தே இதிலெல்லாம் ஒரு ஈடுபாடு.
சொந்தக்கதை இருக்கட்டும்.
கம்பன் பற்றிய தொடரில் கம்பர் பாடல்கள் இடம்பெறும். ஆழ்வார் பாசுரங்கள் வரலாம். இன்னும் சில சங்க இலக்கியங்கள் இடம் பெறலாம். இதனாலெல்லாம் நான் ஏதோ இதை எல்லாம் கரைத்துக் குடித்துவிட்டு எழுதுகிறேன் என்று எண்ண வேண்டாம். எனக்கு இவற்றில் ஒரு அறிமுகம் உள்ளது. அவ்வளவே.
“இந்து மகா சமுத்திரம்” தொடர் எழுதும்போது திரு.சோ. சொன்னார், “இந்த சமுத்திரத்தில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் பலர். நான் அவர்களைப்பற்றி ஓரளவு அறிந்திருக்கிறேன். தற்போது சமுத்திரக் கரையில் நின்று சில கூழாங்கற்களைக் கையில் வைத்துள்ளேன். அவ்வளவே” என்று பொருள் படும்படி பேசினார்.
நான் அதுவும் இல்லை. கூழாங்கற்கள் சமுத்திரக்கரையில் இருக்கின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு கூழாங்கற்களையே தெரியாது. அதன் பின்னர்தான் சமுத்திரம், அதன் ஆழம் எல்லாம்.
இப்படி இலக்கியம், ஆன்மிகம், தமிழ் மறைகள், வேதாந்தம் முதலிய பலவற்றில் காற்று வாங்கியவர்களைப் புரிந்துகொள்ள முயற்ச்சித்திருக்கிறேன். அதன் வெளிப்பாடே கம்பன் பற்றிய தொடர்.
எழுதப் போவதில் தவறுகள் இருக்கலாம். அவை கம்பன் குற்றம் அல்ல, என்னுடைய அறியாமை அல்லது மொழி மீது எனது ஆளுமைக்குறைவு என்று நான் கூறித்தான் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதில்லை.
Disclaimer/claimer first
LikeLike