ஸார்வாகர்களின் தலைவர் கேட்ட கேள்வி கூட்டத்தை நிதானமிழக்கச் செய்தது. சிறிது சலசலப்புக்கள் தோன்றின.
ஸார்வாகர்கள் சித்தாந்தம் அப்படியானது. அவர்கள் மரபுப்படி கண்ணால் காண்பது மட்டுமே உண்மை. மற்றது பற்றிப் பேசுவது எல்லாம் வீண்.
இந்த சித்தாந்தக்காரர்கள் இன்று நேற்று அல்ல பல ஆயிரம் ஆண்டுகளாகவே நமது தேசத்தில் உள்ளனர். இந்தப் பரந்த பரத கண்டத்தில் யாருக்கும் இடம் உண்டு. யாரும் எந்தக் கொள்கையும் கொண்டிருக்கலாம். ஏனெனில் நமது சித்தாந்தம் அப்படிப்பட்டது. உடல் வேறுபாடு உடையதே தவிர ஆன்மா வேறுபாடு இல்லாதது. அனைவரது ஆன்மாவும் ஒன்றே. அவற்றிடம் உயர்வு தாழ்வு இல்லை. இதுவே நமது விசிஷ்டாத்வைதம்.
ஸார்வாகர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறினேன்.
‘ஸார்வாகர்களே, பஞ்ச பூத சேர்க்கைவாதிகளே, உங்களுக்கு என் வந்தனங்கள். நீங்கள் கேட்டுள்ள கேள்வி நியாயமானது. வெற்றிலை பச்சை நிறம் உடையது. சுண்ணாம்பு வெள்ளை நிறம் கொண்டது. ஆனால் இரண்டையும் சேர்த்து உண்டால் சிகப்பு நிறம் உருவாகிறது. அதைப்போல பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உயிர்கள் உண்டாகின்றன. இதற்கு ஏன் இவ்வளவு கூப்பாடு, ஆத்தும விசாரம் என்ற போர்வையில் வீண் விவாதம் என்பது உங்கள் கேள்வி.
இந்தக் கேள்விகள் பல ஆயிரம் ஆண்டுகளாகவே கேட்கப்பட்டு வருகின்றன. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் கேட்கப்படும். வேறு பெயர்களில் இதே கேள்வியைக் கேட்பார்கள்.
ஸார்வாகரே, நீங்கள் எப்போதாவது ‘நமக்கும் ஆடு மாடுகளுக்கும் என்ன வேறுபாடு?’ என்று யோசித்ததுண்டா ? அவையும் உணவு உண்கின்றன, இனப் பெருக்கம் செய்கின்றன, சண்டையிடுகின்றன, செத்து மடிகின்றன. நாமும் அப்படியே தானா ?
உலகமே பஞ்சபூத சேர்க்கை மட்டும் தான் என்றால் ஆடு மாடுகளுக்கும் அவற்றைவிடக் கீழான உயிர்களுக்கும் நமக்கும் வேறுபாடு இல்லையா என்று நினைத்துப்பார்த்ததுண்டா ?
இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
இன்னொரு தளத்தில் நல்லவர்கள் துன்பம் அடைவதும், தீயவர்கள் நன்மை அடைவதும் ஏன் என்றும் எண்ணிப்பார்த்ததுண்டா ?
மனிதர்கள் உடலினால் செய்யும் தீமைகள் அவர்களது தற்கால வாழ்க்கையைப் பாதிப்பதில்லை என்று நீங்கள் பார்த்ததில்லையா ?
ஆகவே, இக்காலத்தில் மனிதர்கள் செய்யும் செயலால் அவர்களுக்குப் பாதிப்பில்லை என்றால் வேறு ஏதோ காலத்தில் அவர்கள் செய்த செயலால் தற்போது பாதிக்கப் படுகிறார்கள் என்று தானே அர்த்தம் ?
ஆக, தற்காலத்தில் மனிதனின் வாழ்க்கைக்கும் முன் எப்போதோ அவன் செய்த செயலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு உள்ளது என்பது புரிகிறதா ?
ஆனால் உடல் அழிவு அடையுமே ? உடல் அழிந்தபின் அவனது செயல்களும் அழிய வேண்டுமே ? ஆனால் செயல்கள் அப்படி அழியாமல் மனிதனைப் பின்தொடர்கின்றனவே. அது எப்படி ?
எனவே மனித உடலுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு தொடர்பு தெரிகிறதா ? அதையே நாங்கள் ஆன்மா என்கிறோம்.
ஒரு உடலுக்கும் அது அழிந்தபின் ஏற்படும் இன்னொரு உடலுக்கும் உள்ள தொடர்பு ஆன்மாவினால் ஏற்படுவது. உடல் ஒரு அங்கவஸ்திரம் போன்றது. அங்கவஸ்திரம் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் அதை அணியும் மனிதன் மாறுவதில்லை.
அது போல் ஆன்மா அழிவதில்லை. அது அணியும் அங்கவஸ்திரமாகிய உடல் மாறும், அழியும், தோன்றும். அழிந்த ஒரு உடலுக்கும் பிறக்கும் இன்னொரு உடலுக்கும் உள்ள தொடர்பே ஆன்மா என்பது. இதனாலேயே ஒரு உடல் ஒரு பிறவியில் செய்யும் காரியம் ஆன்மாவில் தங்கி அந்த ஆன்மா இன்னொரு உடலில் இருக்கும்போது பலன் அளிக்கிறது. நல்லவர்கள் துன்பம் அடைவது, தீயவர்கள் சுக போகங்களில் திளைப்பது இதனால் தான்.
ஆக, பஞ்ச பூத சேர்க்கை தவிர வேறு ஏதோ ஒன்று உள்ளது என்பது புலனாகிறது அல்லவா ?’, என்று கூறி நிறுத்தினேன்.
‘அப்படியென்றால் ஆடு மாடுகள் நம்மைவிட தாழ்ந்தவை என்று கூறுகிறீரா ? உங்கள் சித்தாந்தத்தின்படி அனைத்து உயிர்களும் சமம் அல்லவா ?’, என்று கேள்வி எழுப்பினார் ஸார்வாகர்.
‘உடல் அளவில் மனிதனுக்கும் ஆடு மாடுகளுக்கும் வேறுபாடு இருக்கிறது. ஆனால் ஆன்ம அளவில் அனைத்தும் ஒன்றே. உயர்வு தாழ்வு என்பதெல்லாம் இல்லை. வேற்றுமை என்பது உண்டு ஆனால் அனைத்து உயிர்களும், ஏன் ஜடப் பொருட்களும் கூட சமானமானவையே. தத்துவ த்ரையம் என்பது அது தானே. சத், சித், ஈசன் மூன்றும் உண்மை. இதோ இந்தத் ‘த்ரி தண்டம்’ இருக்கிறதே – அது உணர்த்தும் பொருள் அது தானே’, என்று கூறி என் கையில் இருந்த ‘த்ரி தண்டம்’ என்னும் மூன்று மூங்கில் கழிகளின் ஒன்றாகப் பிணைந்த நிலையை உணர்த்தினேன்.
ஸார்வாகர்கள் மேலும் பேசவில்லை. ஆனால் அவர்கள் எப்போதும் பேசாமலே இருப்பார்கள் என்று அர்த்தம் இல்லை என்பது தெரிகிறது. ஸார்வாகர்கள் எப்போதும் இருந்துகொண்டே இருப்பார்கள். இந்த என் எழுத்தை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் போதும் ஸார்வாகர்கள் இருப்பார்கள். ஆனால் வேறு பெயரில், வடிவத்தில் இருப்பார்கள். ஆனால் எப்போதும் இருப்பார்கள். இப்படியாகக் கேள்விகள் கேட்டபடி இருப்பார்கள். சில நூறு ஆண்டுகள் கழித்து பாரசீகம் தாண்டி மிலேச்ச ராஜ்யங்களில் இருந்து சில பண்டிதர்களின் பேச்சும் இப்படியே இருக்கும். அவர்களின் உந்துதலால் பல ராஜ்ஜியங்கள் மாறும். அந்த இடங்களில் எல்லாம் ஸார்வாக சித்தாந்தம் பரவும். ஆனால் சில வருஷங்களிலேயே அவை அழியும். இப்படியாக எனக்குத் தென்படுகிறது.
ஆனால் ஒன்று. ஸார்வாகர்கள் நமது தத்துவ வெளியில் ஒரு சிறந்த படித்துறை போன்றவர்கள். அவர்களது கேள்விகள் விகாரமாகத் தோன்றினாலும் நமது பாரத தேசத்தின் சிந்தனையைத் தூண்டி விடுபவை. நமது சித்தாந்தங்கள் தெளிவான குளத்தின் நீர் போன்றவை. படித்துறை போன்ற ஸார்வாக தத்துவக் கேள்விகளின் வழியே நமது அத்வைத, விஸிஷ்டாத்வை சித்தாந்தங்களில் மூழ்க நமது பாரத கலாச்சாரம் ஏற்படுத்தியுள்ள வழிமுறை இது.
இந்த ஸார்வாகத் தனமான் கேள்விகள் எக்காலத்திலும் இருக்கப் போவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. வைதீக மதஸ்தர்கள் என்று சொல்லிக்கொண்டு, ஆச்சாரியர்களின் வழிகாட்டுதலைத் தவறாகப் புரிந்துகொண்டு அவற்றின் சத்தான உட்கருத்தை விட்டுவிட்டு மேலோட்டமான சில சடங்குகளை மட்டுமே பிடித்துக்கொண்டிருக்கும் வைதீக சம்பிரதாய மரபினர் வரப்போகிறார்கள். அவர்களினால் இந்த அத்வைத, விசிஷ்டாத்வைத சித்தாந்தங்களின் ஆழத்தை உணர முடியாது. எனவே அவற்றை மற்றவரிடமும் எடுத்துரைக்க முடியாது. இதன் காரணமாக இந்த சம்பிரதாயங்கள் கேலிப்பொருட்களாகும். இதன் காரணமாக ஸார்வாகம் சிறந்த ஒரு மார்க்கம் போல் தோற்றமளிக்கும்.
ஆன்மீகம் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளாத, புரிந்துகொள்ள முயற்சி செய்யாத ஒரு வைதீகக் கூட்டம் ஏற்படும். அதன் காரணமாகவும், வெறும் சோறு மட்டுமே வாழ்க்கையின் இலட்சியம் என்று மக்களைத் திசை திருப்பும் மிலேச்ச அரசுகளின் காலம் ஏற்படும். அப்போது இந்த வைதீகக் கூட்டம் தன் இயல்பு மறந்து, தனது அறிவை உணவுக்கு அடகு வைத்து, வெறும் சடங்குகள் மட்டுமே ஆன்மீகம் என்று நம்பி அந்த வழியே வாழும் காலம் துவங்கும். அப்போது இந்த தேசத்தின் கலாச்சார வீழ்ச்சி அதிவேக அளவில் எற்படும்.
ஆன்மீகம் என்பது தளைகளிலிருந்து விடுபடுதல் என்ற பொருள் போய், வெற்று சடங்குகளின் அணிவகுப்பு என்ற கருத்து வலுப்படும் காலம் ஒன்று வரப்போகிறது. அப்போது ஸார்வாகம் மேலும் ஸ்திரப்படும். இப்படியாக என் கண்களுக்குத் தெரிந்துகொண்டிருந்தது.
‘ஸ்வாமி, தேவரீர் அத்வைதம் விடுத்து இப்போது ஸார்வாகம் சென்றுவிட்டீரே’, என்று சற்று புன்னகையுடன் கூறி மீண்டும் வாதப் பொருளுக்கு அழைத்து வந்தார் யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகள்.
interesting debate.
LikeLike
Thank you.
LikeLike