‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ பாசுரத்தில் ஆய்ச்சியரின் நோன்பு முடிவடைவது குறிக்கப்படுகிறது. நோன்பு முடிந்தமைக்கான அடையாளங்கள் சொல்லப்பட்டன.
இரண்டாம் பாசுரத்தில் (‘வைத்து வாழ்வீர்காள்’) நோன்பு நோற்பதால் செய்யும் கிரியைகள் சொல்லப்பட்டன. இன்றைய பாசுரத்தில் அவை விலக்கப்படுகின்றன. இன்று பாற்சோறு உண்கிறார்கள், நெய் முழங்கை வழியாக ஓடும் அளவிற்கு அக்கார அடிசில் உண்கிறார்கள், புத்தாடை அணிகிறார்கள், சூடகம், பாடகம், தோடு, செவிப்பூ முதலிய பல அணிகலன்களை அணிகிறார்கள். இவை நோன்பு முடிந்ததற்கான அடையாளங்கள்.
இப்பாசுரத்தில் ‘கூடாரை’ என்னும் சொல் உற்று நோக்கத்தக்கது. ‘கூடார்’ என்பவர் எதிரிகள் / பகைவர் என்பது வெளிப்படை. நான்கு வகையான பகைவர்கள் உள்ளார்களாம்.
- கண்ணனை அறியாதவர்கள்
- அறிந்தும் வந்து அடி சேராதவர்கள்
- அறிந்தும் மனம் குழம்பி, அடியார் குழாத்தில் சேராதவர்கள்
- அறிந்தும் வேண்டுமென்றே எதிர்ப்பவர்கள் / சேராதவர்கள்
இவர்கள் அனைவரையும் அன்பினால் வென்று தன்னிடம் சேர்த்துக் கொள்பவன் கண்ணன் என்னும் பொருள்பட வருகிறது இச்சொல்.
இது சொல்லாமல் சொல்லும் பொருளும் உண்டு. ‘கூடாரை வெல்லும்’ என்றால், ‘எதிர்ப்பவரை வென்று’ என்று பொருள் படுகிறது. ஆக, ‘கூடியவரிடம் தோற்று’ என்கிற மறைபொருளும் வருகிறது என்பார் உரையாசிரியர். அடியாரின் அன்பினால் அவர்களிம் தோற்று நிற்கிறான் என்கிறாள் ஆண்டாள்.
நெய், சோறு, பால் விஷயத்தில் மகளும் தந்தையும் ஒன்றுபோலவே இருக்கிறார்கள். பெரியாழ்வார் பாசுரத்தைப் பாருங்கள்.
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே.
வைஷ்ணவ சித்தாந்தத்தின் படி, இப்பாசுரத்தில் வரும் பொருட்கள் குறிப்பனவாகப் பெரியோர்கள் / காலட்சேபக்காரர்கள் உரைப்பவை:
- பறை – பகவத் கைங்கர்யம் / சரீர , புஷ்ப கைங்கர்யம்
- கூடாரை வெல்லும் – கண்ணனின் குணங்களான சவுந்தர்யம், சவுசீல்யம், சவுர்யம்
- சூடகம் , தோள்வளை – சங்கு சக்கரப் பொறி
- செவிப்பூ – த்வயம் என்னும் பக்தி
- பாடகம் – காலில் அணியப்படும் அணிகலன் = சரணாகதி
- பல்கலன் – அடியாருக்குத் தேவையானபக்தி, ஞானம், வைராக்யம்
- ஆடை – ஜீவாத்மா பரமாத்மாவுக்கு உரியது என்று உணர்ந்திருத்தல்
இப்பாசுரத்தில் ‘பாடகம்’ என்பது ‘பாத கடகம்’ என்னும் வடமொழிச் சொல்லின் திரிபு.