மனதில் உள்ளதை அப்படியே எழுதினால் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் உள்ளது போல் தோன்றும். இதை நீங்கள் வாசிக்கும் காலமோ நான் எழுதும் காலத்தை விட வேறுபட்டது. ஆகவே வாசிக்கும் நீங்கள் குழம்பவும் வாய்ப்புள்ளது.
வயோதிகம் காரணமாக மனதில் உள்ளதை, நினைவின் மேல் அடுக்கில் உள்ளதை முதலில் எழுதலாம் என்று தோன்றுகிறது. ஆனால், அந்த நிகழ்வு முக்கியமானதா என்பதைப் பற்றி என் அபிபிராயம் எதுவும் இல்லை. ஏனெனில், என் காலத்தைல் என்னை மிகவும் பாதித்த நிகழ்வு ஏதாகிலும் இருந்தால் அதுவே என் மனதில் ஆழப் பதிந்து அடிக்கடி நினைவில் வந்து செல்லும். ஆனால், அம்மாதிரியான நிகழ்வு உங்களுக்குப் பெரிய மன பாதிப்பை ஏற்படுத்த எந்த முகாந்திரமும் இல்லை. ஏனெனில், ஆத்ம அளவில் நமது அனுபவங்கள் வேறுபட்டவை என்பது ஒன்று. மற்றொன்று தற்காலத்தில் ( நான் எழுதும் காலத்தில், எனக்கு நிகழ்ந்த ஒன்று) உங்கள் காலத்தில் அதிக முக்கியத்துவம் இல்லாத ஒன்றாக இருக்கலாம். ஏனெனில் சமூகம் அப்படி தன்னை மாற்றிக்கொண்டிருக்கலாம் என்பது என் ஊகம்.
எது எப்படியோ, நான் என் மனதில் உள்ளதை எழுதுகிறேன். நிகழ்வுகள் காலத்தில் முன்னே பின்னே இருக்கலாம் என்றும் நினைக்கிறேன். கோர்வையாக இல்லாமலும் இருக்கலாம். நினைவில் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்தவை ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்தவை போல் தோற்றமளிக்கலாம் என்றும் தோன்றுகிறது.
ஆகவே, இது என் வாழ்க்கைச் சரித்திரம் அன்று. என் மன ஆழத்தில் ஊறி, பலமுறை மேலே எழுந்து வந்து என்னை உலுக்கியிருக்கும் சில நிகழ்வுகள், என் நெஞ்சில் நீங்கா வடுவைப் போல், தினமும் வலி ஏற்படுத்தும் சில விஷயங்கள், தீர்ந்துவிடும் என்று நான் நினைத்திருந்த சில பழக்கங்கள், என்னை மாற்றிய, என் திசையை மாற்றிப் போட்ட செய்திகள் என்று பலதையும் சொல்லலாம் என்று எண்ணுகிறேன்.
தினமும் கனவில் வந்து என்னைத் உறக்கத்தில் இருந்து விழிக்கச் செய்யும் ஒன்று உண்டு என்றால் அது ஒரு பங்குனி உத்திர நாள் மட்டுமே. அன்று ஶ்ரீரங்கத்தில் நடந்தவை மட்டுமே. துருஷ்கன் செய்த காருண்யமற்ற செயல்கள், அதனால் என் அப்பன் ரங்கநாதனும் தாயாரும் பட்ட பாடு, அரங்க நகர் வாழ் வைஷ்ணவர்கள் பட்ட அவதி, பன்னீராயிரவர் செய்த பலிதானங்கள் என்று இவையே என்னைத் தினமும் வாட்டுகின்றன.
பெருமாளின் பரம கிருபையால் தற்போது ஓரளவு முன்னேறியுள்ளது என்றாலும் நிலைமை இன்னமும் என் பால்யப் பருவத்தில் இருந்த போது இருந்த அமைதி நிலைக்குத் திரும்பவில்லை. துருஷ்கன் வழியாகக் கஷ்டங்கள் அங்கங்கே தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. யௌவனர்களால் இன்னும் சில காலங்கள் கஷ்டங்கள் நீடிக்கும் போல் தெரிகிறது. அதற்குப் பின்னர் யௌவனர்களின் உறவுக்காரர்கள் என்று சொல்லிக்கொண்டு பலர் வரப் போகிறார்கள். அவர்களாலும் நமது சம்பிரதாயத்திற்கு ஏற்படவிருக்கும் ஹானி மனதை ரொம்பவும் ஹிம்ஸிக்கிறது.
கண் முன்னே ஓடிய ரத்த ஆறு பல நாட்கள் என்னை உறக்கம் கொள்ள விடவில்லை. சந்தியாக்கால அனுஷ்டானங்களைச் செய்யும் போது அன்று பங்குனி உத்திர சந்தியா வேளையில் நடந்த ரத்த அர்க்யம் மனதில் தோன்றுகிறது. ‘கேஸவம் தர்ப்பயாமி’ என்று தீர்த்தத்தைக் கையில் விட்டால் செக்கச்செவேல் என்று ரத்தம் அர்க்ய வடிவில் ஓடுவதைப் பொல் தோன்றுகிறது. குமார வரதன் என் வயோதிகத்தால் அப்படித் தோன்றுகிறது என்று சொல்கிறான். ஆனால், என் மனதில் படிந்துள்ள அந்த ரத்த ஊற்று, அன்று சந்தியா வேளையில் ரங்கநாதன் முன்னர் நடந்த ஊழிப் பெரு வெள்ளம் என்பதாகவே என் கையில் இருந்து கொட்டுகிறது தோன்றுகிறது.
‘ஸ்ருதப்ரகாசிகா’வை நான் காப்பாற்றினேனா, அல்லது அந்தக் கிரந்தம் என்னைக் காப்பாற்றியதா என்று கேட்டால் அந்த பாஷ்யக் கிரந்தமே என்னைக் காத்தது என்று சொல்வேன். உடையவரின் பேரருள் அந்தக் கிரந்தத்தின் ஸ்தூல ரூபமாக வந்து என்னைக் காத்தது, அதனால் இன்று வரை நான் நடமாடிக்கொண்டிருக்கிறேன் என்றும் சொல்வேன். அந்தப் க்ரந்தத்தை எப்படியாகிலும் காப்பாற்றி ஶ்ரீரங்கம் கோவிலுக்கு வெளியே கொண்டுவந்து விட வேண்டும் என்று என்னைச் செலுத்தியது யார் என்று நினைக்கிறீர்கள்? சாக்ஷாத் ஶ்ரீமத் ராமானுஜரே என்னைச் செலுத்தி வெளியே கொண்டு சேர்த்தார் என்றே நினைக்கிறேன். அந்த மஹா ஆச்சார்யனை இன்றும் நன்றியோடு வணங்குகிறேன்.
‘ஸ்ருதப்ரகாசிகா’வை நான் அன்று எப்படி பெற்றுக் கொண்டேன், சுதர்ஸன சூரியை காக்கத் திராணியற்றவனாக எப்படி நின்றேன் என்பதை நினைத்தால் மனம் ஹோவென்று அழுகிறது. ஒரு பக்கம் துருஷ்கப் படைகள் ராவணாதிகளைப் போல விரட்டுகின்றன. பெரும் இரைச்சலுடன் அந்தப் படைகள் கோவிலுக்குள் நுழைந்து கண்ணில் பட்டதை எல்லாம் வெட்டுகிறது. எந்தச் சிலை கண்ணில் பட்டாலும் சிதைக்கிறது. யார் யாரை வெட்டுகிறார்கள் என்று புரிவதற்குள் கண் முன்னே தலைகள் விழுகின்றன. ஆடிப்பெருக்கன்று அலை பெருக்கி வரும் காவிரி தீர்த்தம் போல் ரத்தம் கொப்புளிக்கிறது. சற்று நேரத்திற்கு முன் என்னுடன் சேர்ந்துகொண்டு கல் சுவர் எழுப்பியவர்கள் என் காலடியில் தலை இல்லா உடலாகக் கிடக்கின்றனர். ‘இப்போது தானே கைங்கரயம் செய்து கையில் ஈரம் கூட உலரவில்லையே, இவ்வளவு சீக்கிரம் திருநாடு ஏள்ளிவிட்டீரே’ என்று கீழே குனிந்து அவரது ப்ரேதத்தைத் தடவிக் கொடுத்து ஒரு சொட்டு கண்ணீர் பெருக்க முயன்றால் அதற்குள் அருகில் பிறிதொரு கைங்கர்யபரரின் ப்ரேதம் சாய்கிறது. யாரென்று பார்த்தால் பெருமாளுக்கு ஆலவட்ட கைங்கர்யம் பண்ணின வயோதிக வைஷ்ணவர். ஒன்றைப் பார்த்து முடிக்கும் முன் மற்றொன்று.
யார் இருக்கிறர்கள், யார் சாய்ந்தார்கள் என்று தெரியாதபடி அன்று மாலை கோரம் சுழன்று சுழன்று ஆடியது.
புருஷர்கள் மட்டுமே அழிந்தனரா என்றால் அப்படி இல்லை. ஸ்திரீகளும் ஈவு இரக்கம் இல்லாமல் வெட்டப்பட்டனர். பெருமாளுக்குக் கைங்கர்யம் ஒன்றையே நினைவில் கொண்டுள்ள வைஷ்ணவ ஸ்திரீகள் மட்டும் தான் இந்தக் கோரத்திற்கு ஆளாகினரா என்றால் அதுவும் இல்லை. ஸ்திரீ லக்ஷணத்துடன் யார் இருந்தாலும் அவர்களுக்கு ஒரே கதிதான். பெருமாளுக்காகவே தங்கள் வாழ்நாளைக் கொடுத்துள்ள, தாஸ்ய பாவத்தில் லயித்து, பெருமாளுக்கு உகந்த கார்யங்களுக்காகவே தங்களை ஒப்புவித்த தாஸ்ய கன்னிகைகள் பாடு ரொம்பவுமே மோசமாக இருந்தது. லோக மாதாவான தாயருக்கு முன்னால் அந்தத் தாய் ஸ்தானத்தில் இருந்த தாஸ்ய கன்யாக்களும் துருஷ்கனின் அகோர தாண்டவத்திற்குப் பலியாயினர்.
மடப்பள்ளியில் இருந்து வெளியில் வந்த பரிசாரகர்கள் தங்கள் கண்களைத் துடைத்துக் கொண்டு ‘என்ன நடக்கிறது? என்ன கூச்சல்?’ என்று தெரிந்துகொள்வதற்கு முன்பாகவே வெட்டிச் சாய்க்கப்பட்டனர். தினமும் பூ கைங்கர்யம் பண்ணும் ஸ்வாமி கூடை நிறைய மல்லிகைப் பூ கொண்டு வந்தார். நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து நிதானிப்பதற்குள் வெள்ளைவெளேரென்ற பூக்களால் நிரம்பிய பூக்கூடை செக்கச்செவேலென்று நிறம் மாறிக் கவிழ்ந்து கொட்டியது. ரத்த நிறத்துடன் சிதறிய மல்லிகை மொட்டுகள் ந்ருஸிம்ஹனின் கோபம் காரணமாக ஹிரண்யகசிபுவின் உடலில் இருந்து விழுந்து தெளித்த ரத்தத் துளிகள் போல் தென்பட்டன.
ரங்கநாதன் மீதான பக்திப் பெருவெள்ளம் ஓடிக்கொண்டிருந்த கொவில் பிராகாரங்களுக்குள், அனைத்துத் தரப்பையும் சார்ந்த அடியார்களின் ரத்தம் ஒன்றாகக் கலந்து ஆறாக ஓடியது. உடையவர் கண்ட சமத்துவம் ரத்த சமத்துவமாக ஓடியது.
அந்த நேரத்தில் சுதர்ஸன சூரி கழியை ஊன்றிக்கொண்டு வந்தார்.
மிக அருமையாக உள்ளது. எழுத்துப் பிழைகளை மட்டும் கொஞ்சம் மாற்றி விடுங்கள்
ஓடுவதைப் //பொல்//
பெருவெள்ளம் ஓடிக்கொண்டிருந்த //கொவில்// பிராகாரங்களுக்குள்//
LikeLike