'கருப்பு வெள்ளி'யும் பல பலியாடுகளும்

இந்த நாராசப் பழக்கம் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி ஆன இன்னொரு வினை. தேவையோ தேவை இல்லையோ என்னத்தையாவது வாங்கியே ஆவது என்னும் ‘நுகர்வென்னும் பெரும்பசி’ பிடித்த அமெரிக்க காட்டுச் சந்தைப் பொருளாதார மாடலின் இந்தியப்படுத்தலின் விளைவு, இந்தியாவின் அமேஜான், பிளிப்கார்ட் விளம்பரங்கள். இதன் பின்னர் நம் இந்திய மத்தியதரம் கண்மூடிச் செல்கிறது.

1987ல் நான் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது அப்பாவிடம் ஒரு பவுண்டன் பேனா கேட்டிருந்தேன். சுமார் ஆறு மாதங்கள் ஆறப்போட்டு, பல நினைவூட்டுதல்களுக்குப் பின் ஒரு நாள் வாங்கிக் கொடுத்தார். அதன் விலை ஆறு ரூபாய். அது அன்று அவருக்குப் பெரிய பணம். 12ம் வகுப்பு வரை அந்த ஒரே பேனா தான் பயன்படுத்த வேண்டும் என்னும்  வழிகாட்டுதலுடன் பேனா என்னை வந்தடைந்தது. அவசியமான ஒன்றுக்கே அத்தனை கெடுபிடிகள்.

அப்போது எனக்கு கைகெடிகாரம் தேவைப்பட்டது. அப்பாவிடம் கேட்க பயம் மட்டும் அல்ல, அவரிடம் கேட்டு அவரது இயலாமையை உணர்த்த விருப்பம் இல்லை. திடீரென்று அப்பா தனது பழைய கைகெடிகாரத்தை என்னிடம் கொடுத்தார். அன்று அவர் பணிக்குச் சேர்ந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதால் அலுவலகத்தில் அவருக்கு எச்.எம்.டி கைகெடிகாரம் கொடுத்திருந்தார்கள். என்னிடம் வந்து சேர்ந்த அந்தப் பழைய கெடிகாரம் தனது அனைத்து பாகங்களும் புதுப்பிக்கப்பட்டு, மேலும் 10 ஆண்டுகள் உழைத்தது. இது முன்னொரு காலத்தின் கதை.

சில வருடங்கள் முன்பு வரை, ஏதாவது வாங்க வேண்டும் என்றால் கடைக்குப் போய் அதை மட்டும் வாங்குவார்கள். ஆனால் தற்போது ‘ஷாப்பிங்’ என்னும் வியாதி பிடித்து, எதையாவது வாங்க வேண்டும் என்பதற்காகக் கடைக்குச் செல்கிறார்கள். கடையில் இன்னது தான் வாங்க வேண்டும் என்று இல்லாமல், கண்ணில் பட்டதை எல்லாம் வாங்குகிறார்கள்.

பொழுது போகவில்லை என்றால் ‘ஷாப்பிங்’ செல்கிறார்கள். ஏதாவது மாலில் கால் கடுக்க நடந்து, ஒவ்வொரு கடையாக ஏறி, வேண்டியது வேண்டாதது எல்லாம் பார்த்து, விலை விசாரித்து, முடிவில் சில மணி நேரங்களை வீணாகக் கழித்து, தேவையே இல்லாமல் விலை பெருத்த கரடி பொம்மை ஒன்றை வாங்கி வருகிறார்கள். பின்னர் அதை எழுந்தருளப் பண்ணுவதற்கு என்று தனியாக அலமாரி வாங்க வேண்டியுள்ளது.

அப்படி தேவை இல்லாமலே வாங்குவதற்கு என்று கண்டுபிடிக்கப்பட்ட நாள் ‘கருப்பு வெள்ளி’ (Black Friday) என்று தற்காலத்தில் அறியப்படுகிறது. அமேஜான், பிளிப்கார்ட் முதல் அடுத்த தெரு அண்ணாச்சி கடை வரை ‘கருப்பு வெள்ளி’ பற்றிப் பேசுகிறார்கள். நவம்பர் மாத கடைசி வெள்ளிக் கிழமையை இப்படி அழைக்கிறார்கள்.

அன்று எதையாவது வாங்கியே ஆக வேண்டுமாம். ஒரு மாதம் முன்பிருந்தே கவனத்தை ஈர்க்கும் வண்ணம் விளம்பரங்கள். சுலபத் தவணை முறையிலும் பணம் கட்டலாமாம். ஐபேட் முதல் அடுப்பங்கரை உப்பு வரை அதிரடி விலைக் குறைப்பு என்று ஒரே அமர்க்களம். ‘நான் ஆர்டர் போட்டுடேன், நீ போட்டுவிட்டாயா?’ என்று குசலம் விசாரிப்புகள் வேறு.

இந்த நாராசப் பழக்கம் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி ஆன இன்னொரு வினை. தேவையோ தேவை இல்லையோ என்னத்தையாவது வாங்கியே ஆவது என்னும் ‘நுகர்வென்னும் பெரும்பசி’ பிடித்த அமெரிக்க காட்டுச் சந்தைப் பொருளாதார மாடலின் இந்தியப்படுத்தலின் விளைவு, இந்தியாவின் அமேஜான், பிளிப்கார்ட் விளம்பரங்கள். இதன் பின்னர் நம் இந்திய மத்தியதரம் கண்மூடிச் செல்கிறது.

ஒரு கைப்பேசி இருக்கும் போதே இன்னொன்று வாங்குவது, ‘நல்ல ஆபர்ல போட்டான், வாங்கிட்டேன்’ என்று இதில் பெருமை வேறு. இதைவிட இதற்காக அமேஜான், பிளிப்கார்ட் தளங்களில் நாள்தோறும் மணிக்கணக்கில் காத்திருப்பது கணக்கற்ற மனித ஆற்றலின், நேரத்தின் பெரும் வீணடிப்பு.

நன்றாகவே வேலை செய்யும் கைப்பேசியை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? புதிய மாடலில் 4 GB RAM என்பதால் வாங்கினேன் என்கிறார்கள். ஒரு கணிணியில் இருக்க வேண்டிய மெமரி, கைபேசியில் எதற்கு? கைப்பேசியில் அதிக திறன் மற்றும் துல்லியம் உள்ள கேமரா இருக்கிறது என்கிறார்கள். கைப்பேசியில் பேசுவதைத் தவிர அனைத்துக்கும் வசதி இருக்கிறது; மக்கள் அதையும் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். அந்தக் கம்பெனிகளுக்கு முன் ஜென்மத்தில் என்ன கடன் பட்டார்களோ என்னவோ.

‘கருப்பு வெள்ளி’ கண்றாவி அங்கொன்று இங்கொன்று என்று இருந்தது போய், தற்போது சர்வ வியாபியாய் அலுவலகங்களின் உணவு இடைவேளைகளில் பேசப்படும் ஒரே பேச்சாக இருப்பது மனித இனத்திற்கே பெருத்த அவமானம். ஒன்று ‘கருப்புப் பணம்’ பற்றிப் பேசுகிறார்கள்; இல்லை ‘கருப்பு வெள்ளி’ பற்றிப் பேசுகிறார்கள்.

எதையாவது வாங்கியே ஆக வேண்டும் என்பது ஒன்று. அடுத்தவனை விட அதிகமாக வாங்கியுள்ளேன் என்று சொல்லிக்கொள்வது இன்னொன்று. இப்படிச் சொல்லிக் கொள்ளவாவது வாங்குகிறார்கள்.

இது தவிர டி.ஐ.ஒய். (DYI) பதார்த்தங்கள் என்று ஒரு வகை. ஒரு நாற்காலி வாங்க வேண்டும் என்றால் ஆசாரியிடம் செல்வது போய், நாற்காலியைத் தயாராக வைத்துள்ள கடைகளுக்குச் சென்றார்கள். தற்போது அதுவும் போய், அமேஜானில் ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார்கள். நாற்காலி ஐந்து பாகங்களாய் வந்து சேர்கிறது. அதை ஒருங்கிணைக்கும் வேலையும் வாங்குபவருடையதே. ‘காசையும் கொடுத்து தேள் கடியையும் வாங்கிய’ கதையாய், பணம் கொடுத்து வாங்கி, வீட்டில் நாற்காலி செய்கிறார்கள். ‘ஐக்கியா’ என்னும் பெருநிறுவனம் மக்கள் தலையில் மிளகாய் அறைத்து, வெறும் நாற்காலியின் மர பாகங்களை ஆனை விலைக்கு விற்கிறது. பெருமையுடன் அதையும் வாங்கி வந்து, வீட்டில் அமளி துமளி பண்ணி, நாற்காலி செய்து அதில் அமர்வதில் பெருமகிழ்வு கொள்கிறார்கள் மக்கள். ‘ஐக்கியா’ நாற்காலி செய்தேன் என்று பேஸ்புக்கில் பெருமை வேறு. கடைக்காரன் செய்ய வேண்டிய வேலையை மெனெக்கெட்டு இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதற்குப் பெயர் மாடர்ன் முட்டாள்தனம் என்பது தெரியாமல் செய்கிறார்கள்.

தற்போதெல்லாம் பள்ளிக்கூடப் பிள்ளைகளின் பையில் 4-5 பால் பாயிண்ட் பேனாக்களாவது தென்படுகின்றன. அது தவிர ‘ஜெல்-பென்’ என்று விலை உயர்ந்த பேனாக்கள் குறைந்தது இரண்டு வண்ணங்களில் தென்படுகின்றன. கேள்வியை எழுத ஒரு வண்ணம், பதிலுக்கு இன்னொரு வண்ணமாம். இங்க் பேனா எனப்படும் பவுண்டன் பேனா பயன் படுத்தக்கூடாதாம். இங்க் கொட்டுகிறதாம். பள்ளிகளில் இன்னின்ன வகைகளில் தான் கொடுமைப் படுத்துவது என்று இல்லாமல் எல்லா வகைகளிலும் கொடுமைகள். இதனைக் கேட்கவும் முடியாது. எனவே எப்போதும் வீடுகளில் 15-20 பேனாக்கள் இருப்பது சகஜமாகி விட்டது. ஆனால் ஒன்று. அவசரமாக ஒரு முகவரி எழுதவேண்டும் என்றால் எந்தப் பேனாவும் எழுதாது என்பது நிகழ்கால நிதர்ஸனங்களில் ஒன்று. ஒரே ஒரு பேனா வாங்குவது என்பது போய், ஹோல்சேலில் பேனாக்களைக் கொள்முதல் செய்வதற்குப் பெயர் ‘கருப்பு வெள்ளி’ உற்சவம்.

பாரதப் பொருளாதாரம் செலவிடும் பொருளாதாரம் அல்ல; சேமிக்கும் பொருளாதாரம். ‘விரலுக்குத் தகுந்த வீக்கம்’,  ‘சிறுகக் கட்டிப் பெருக வாழ்’ என்பவை நமது மரபுகள் என்பதை மறந்து, எப்படியாவது வாங்க வேண்டும், எதையாவது வாங்க வேண்டும், நிறைய வாங்க வேண்டும், வாங்கியதைச் சொல்ல வேண்டும் என்கிற கதியில் ஓடுவது என்ன மாதிரியான வடிவமைப்பு?

ஒரு உதாரணம்: ஒரு சட்டை ரூ.200; இரண்டாக வாங்கினால் இரண்டுமாக ரூ. 300. இப்படியாக ‘கருப்பு வெள்ளி’ அன்று விளம்பரம் வரும். சட்டை வாங்க வேண்டிய அவசியம் இல்லாதவர்கள் கூட அன்று ஆபரில் கிடைக்கிறது என்று இரண்டு சட்டைகள் வாங்குவர். எதற்கும் இருக்கட்டும் என்று வாங்குவது என்ன ஒரு மடமை? ‘ஆடித் தள்ளுபடி’ என்பது போல் இது புதியது.

black-fridayஅன்று வரை ஒழுக்கம், விதிகளை மதித்தல், நேரக்கட்டுப்பாடு, நேர்மை என்று பீற்றிக்கொள்ளும் மக்கள் நிறந்த நாடுகளில், அடிப்படை மனிதப் பண்புகள் கூட மறந்து மக்கள் அடி-பிடி என்று முட்டித் தள்ளிக்கொண்டு போய்ப் பொருட்கள் வாங்குவது என்ன மாதிரியான டிசைன்? மனிதத் தன்மையையே இழக்கவைக்கும் ஒரு நிகழ்வை எப்படிக் கொண்டாடுவது?

வெள்ளிக்கிழமை மங்கலங்கள் நிறைந்த நாள் என்று நமது பண்பாட்டில் அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் பணத்தைச் செலவு கூட செய்ய மாட்டார்கள். வீட்டிற்கு வாடகை கொடுப்பது கூட வெள்ளிக்கிழமைகளில் செய்வதில்லை. மஹாலட்சுமியின் நாளாகக் கருதப்படும் அந்த நாளில், நகைகள் வாங்குவது, புதிய சேமிப்புக் கணக்குகள் துவங்குவது என்பது நமது பழக்கங்களில் ஒன்று. இப்போது தீவிர மேற்கத்திய அடிமை மன நிலையில், பொருளாதாரம் சற்று மேம்மட்டுவிட்ட கிறக்கத்தில் வெள்ளிக்கிழமையை ‘கருப்பு வெள்ளி’ என்று பெயரிட்டு அன்று இன்னது தான் என்றில்லாமல் கண்டதையும் வாங்கிக் குவிப்பதை ‘மனநிலை பிறழ்வு’ என்று கொள்வதைத் தவிர வேறென்ன சொல்வது?

எதையெல்லாமோ முட நம்பிக்கை என்கிறார்கள். ‘கருப்பு வெள்ளி’ போன்ற நிகழ்வுகள் அவர்கள் கண்களில் படுவதில்லை. நம்மை நாம் மீண்டும் அடிமைகளாக்கிக் கொள்ள இடைவிடாமல் முயன்றுகொண்டிருக்கிறோம் என்பதைத் தவிர இது வேறென்ன?

இதையாவது செய்யலாம். முட்டாள்கள் தினத்தை ஏப்ரல் 1ல் இருந்து இந்த நவம்பர் மாத நாலாவது வெள்ளிக்கிழமைக்கு மாற்றலாம். வெள்ளி தனது மங்கலத்தையாவது தக்கவைத்துக் கொள்ளும்.

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

2 thoughts on “'கருப்பு வெள்ளி'யும் பல பலியாடுகளும்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: