வைணவ சிந்தனையில் ஆகச் சிறந்த பங்காற்றியவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் பன்னிருவர். இவர்களில் ஒரு பெண்ணும் உண்டு. இவர்கள் இராமானுசர் காலத்திற்கு முற்பட்டவர்கள். சங்கம் மருவிய காலம் முடிந்து பக்தி இயக்கக் காலமே ஆழ்வார்களின் காலம். ஆழ்வார்களின் பங்களிப்பைக் காணும் முன் ஆண்டாளைப் பற்றியும் அக்கால நடைமுறை வழக்கங்கள் பற்றியும் சிறிது ஆராய்வோம்.
மார்கழி மாதம் முழுவதும் வைணவர்களுக்குப் புனிதமானதே. திருமாலும் தான் மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன் என்று கூறுகிறார். பகுத்தறிவாளர் உடனே இறைவன் எல்லா மாதங்களுக்கும் பொதுவானவனாகத்தானே இருக்க வேண்டும் என்று குரல் எழுப்பலாம். மார்கழி மாதம் முழுவதும் இறை தொடர்பான எண்ணங்களுடனே இருந்து சில நோன்புகள் பூண்டு விரதம் முதலியவற்றைப் பேணுவது என்றும் அம்மாதத்தில் திருமணம் முதலிய சமூக நிகழ்வுகள் நடவாமல் மக்கள் மனம் முழுவதும் இறை பற்றியே இருக்க வேண்டும் என்ற நோக்கமே இதன் அடிப்படை என்று கொள்ள முடிகிறது.
இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும் இறைத் தொடர்பான சிந்தனைகளுடனே அம்மாதம் முழுதும் செலவிடுகின்றனர் என்பதும் நோக்கத்தக்கது. கிறித்தவர்களுக்கும் ‘லென்ட்’ (Lent) என்று நோன்பு இருக்கும் மாதம் உள்ளது என்று அறிகிறேன். ஆக மாதம் முழுவதும் நோன்பிருப்பது மனித சமூகம் முழுவதுமே இருக்கும் ஒரு பழக்கம் என்பதும் இறை தொடர்பான எண்ணங்கள் வளர இம்மாதிரி நோன்புகள் பயன்படுகின்றன என்பதும் வெளிப்படை.
நோன்பிற்கும் ஆண்டாளுக்கும் என்ன தொடர்பு ?
ஆண்டாள் இயற்றிய ‘திருப்பாவை’ என்னும் முப்பது பாசுரங்கள் மார்கழி மாதம் முழுவதும் வைணவர்களால் பாடப்படுகின்றன. அப்பாடல் வரிகளின் மூலம் ஆண்டாள் தனது தோழிகளைத் துயில் எழுப்புவது பற்றியும், நோன்பிருந்து இறைவனை அடையவேண்டியது பற்றியும் கூறுவதை அறிகிறோம். இவை மட்டும் அல்லாமல் அக்கால வாழ்க்கை முறை பற்றியும், சில இயற்க்கை நிகழ்வுகள் பற்றியும் நாம் தெரிந்துகொள்கிறோம். பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து நாம் ‘அறிவியல்’ பூர்வமாகக் ‘கண்டுபிடித்தவை’ என்று பறை சாற்றிக்கொள்ளும் சில உண்மைகளும் ஒரு சாதாரண நிகழ்வு போல் ஆண்டாளால் பதிவு செய்யப் படுகிறது. ( “ஆழி மழைக் கண்ணா..” என்று தொடங்கும் பாசுரத்தில் மழை பொழியும் காரணம் தெரிவிக்கப்படுகிறது. கடலில் இருந்து நீர் ஆவியாகி, மேகமாகி மலைகளில் முட்டுவதால் மழை பொழிகிறது என்ற பொருளில் அமைந்துள்ளது இப்பாசுரம்)
ஆண்டாள் காலத்திற்குக் குறைந்தது ஆயிரம் ஆண்டுள் முன்பு ( கி,மு.200 -300) தமிழ் மக்கள் இனக்குழுக்களாக இருந்த நேரத்தில் ( சங்க காலம் துவங்குவதற்கு முன் என்று கொள்ளலாம்) ‘பாவை நோன்பு’ என்ற ஒரு தொன்மையான வணக்க முறை இருந்துள்ளது. அப்போது தாய் வழிச் சமூகமாக இருந்துள்ளதால், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த பாவை நோன்பும் பெண்கள் கடை பிடிப்பதாகவே காட்டப்படுகிறது. இது குறித்துச் சங்கப் பாடல்களும் தெரிவிக்கின்றன.
மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இந்த வணக்க முறைகள் வேளாண் பயிர் சிறந்த முறையில் விளைய வேண்டும், வெள்ளம் முதலிய இயற்கை நிகழ்வுகள் வந்து பயிர்களை அழிக்காமல் இருக்க வேண்டும் என்று அந்தந்த நிலங்களின் தெய்வங்களிடம் வேண்டுவதாக அமைந்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையாக இவை பெண்கள் செய்யும் சடங்காகவே நிகழ்ந்துள்ளது. பெண்களே ‘வளர்ச்சி’, ‘ உற்பத்தி’ முதலியனவற்றிற்குக் குறியீடாக வைக்கப்பட்டிருந்தனர் என்றும் உணர முடிகிறது. . ‘இந்திர விழா’ என்று தொல்காப்பியம் அழைக்கும் மருத நிலம் தொடர்பான விழாவும் இந்த நோன்பு வகைகளில் ஒன்றே.
இந்த விழாக்களில் சிறப்பானது ‘பசுவன்’ என்று மண்ணினால் பசு மற்றும் அதன் கன்று போன்ற பிம்பங்கள் செய்து அதற்குத் தினமும் தானியங்கள், புல் முதலியன படைத்து வழிபடுவது. முப்பது நாட்களுக்குப் பின் அந்தப் பசுவன் வடிவத்தை ஒரு சிறுமியின் மடியில் அமர்த்தி வழிபட்டுப் பின்னர் நீர் நிலைகளில் கரைப்பது என்று இருந்தது. அப்போது பாடி ஆடும் மகளிர் நீர் நிலைகள் நிரம்ப வேண்டும், தானியங்கள் நிறைய விளைய வேண்டும் என்ற பொருள் படும்படிப் பாடுகிறார்கள் என்று இந்திர விழா குறித்த குறிப்புகள் கூறுகின்றன.
பெண்கள் தொடர்பு படுத்தியே இவ்வகை நோன்புகள் இருந்தன என்பது ‘பரிபாடல்’, ‘அக நானூறு’ முதலிய நூல்களில் இருந்து தெரிவதாக ‘ வைணவமும் ஆழ்வார்களும்’ என்னும் நூலில் திரு.தேவராஜன் தெரிவிக்கிறார். தற்காலத்தில் கூட ‘ஔவையார் நோன்பு’, ‘ காரடையான் நோன்பு’, ‘வர லக்ஷ்மி விரதம்’ முதலிய நோன்புகள் பெண்கள் பற்றியதாகவே உள்ளது நோக்கத்தக்கது. இன்றைய காலத்தில் கூட மதுரை மாவட்டங்களில் அம்மன் கோவில் திரு விழாக்களின் போது ‘முளைப்பாரி’ எடுப்பது என்னும் நோன்பு நடக்கிறது. திருவிழா நடக்கும் பத்து நாட்களும் பெண்கள் தானியச் சட்டிகளுக்கு பூசை செய்து, பயிர் சிறிது முளை விட்டதும் பத்தாம் நாள் அதனை எடுத்துக்கொண்டு ஊர் முழுவதும் வலம் வந்து ஆற்றில் கரைப்பது என்று உள்ளதையும் நோக்க வேண்டும்.
இந்த வகையான நோன்புகளும் அவை தொடர்பான வழிபாட்டு முறைகளும் ‘தாந்திரீகம்’ என்னும் சங்க கால வழிபாட்டு முறைகளாம். இந்தத் தாந்திரீக முறைகள் ‘பாஞ்ச ராத்ரம்’ என்னும் இராமானுசர் வகுத்த ஆகம முறையில் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன என்ற கருத்தும் நிலவுகிறது.
சங்க கால நோன்பு முறை போன்றே ஆண்டாளும் பிற கன்னிப்பெண்கள் புடை சூழப் பாவை நோன்பு இருந்து திருமாலை வழிபடுவது என்று பொருள் படும்படித் திருப்பாவையில் பாடுகிறாள். திருப்பாவை என்பதே ‘பாவை’ என்ற நோன்பின் அடியொற்றியே அமைந்துள்ளது நோக்கத்தக்கது.
“… நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ..” என்னுமிடத்தில் தாங்கள் ‘பாவை’ உருவ பிம்பங்களுக்குச் செய்யும் சடங்குகளைக் கேட்பீர்களோ என்று கூறிவது நோக்கத்தக்கது.
ஆண்டாளின் பாடல்களிலும் வேளாண்மை குறித்த நிகழ்வுகளும் அதற்குத் தேவையான அமைப்புகளும் இடம் பெற்றுள்ளன. நாங்கள் நோன்பு நோற்கிறோம், எங்களுக்கு நல்ல மழை தாருங்கள், பயிர்கள் செழிக்கட்டும், பால் வளம் பெருகட்டும் போன்ற வேண்டுதல்கள் தெரிகின்றன.
ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மழை பெய்து அதனால் நீர் நிலைகள் நிரம்பி இருக்கும் வளம் கொழிக்கும் நேரம் அது. மழை பற்றியும், நீர் நிலைகள் பற்றியும் பல இடங்களில் தனது நோன்பின் நோக்கம் பற்றியும் ஆண்டாள் கூறுகிறாள். சில பின் வருவன :
“தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ..”
“மாரி மழை முழைஞ்சில்..”
“சர மழை போல் வாழ உலகினில் பெய்திடாய்..”
ஆநிரைகள் வளத்தின் அடையாளம். ஆண்டாள் அவை பற்றியும் பாடுகிறாள். அவை:
“வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் ..”
“கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு ..”
“கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து..”
“கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் ..”
மேலே சொன்ன பயன்கள் கிட்ட பாவை நோன்பு நோற்கிறார்கள். அதன் செயல் வடிவம் என்ன ? பின் வருபவை அவை :
“வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்…”
நெய், பால் முதலியன உண்ணாதிருத்தல், விடியற்காலமே எழுந்து நீராடுதல், மை தீட்டிக்கொள்ளாதிருத்தல், மலர் சூட்டிக்கொள்ளாதிருத்தல், செய்யக் கூடாதனவற்றைச் செய்யாதிருத்தல், தீமை தரும் சொற்களைச் சொல்லாதிருத்தல் ( புறங்கூறாமை என்றும் ஒரு ஆசிரியர் கூறுகிறார் ) முதலியன நோன்பின் அடையாளங்கள் போலே.
வைணவ பக்தி முறையில் சில ஆழ்வார்களும் தங்களைப் பெண்ணாகப் பாவித்து திருமாலை நோக்கிப் பாடல்கள் இயற்றியுள்ளார்கள். பெரியாழ்வார் தன்னை யசோதையாக நினைத்து ஒரு தாய் தனது குழந்தையை நடத்தும் விதமாகக் கண்ணனைப் பாடி இருக்கிறார். திருமங்கை ஆழ்வார் தன்னைப் ‘பரகால நாயகி’ என்ற பெண் நிலையிலும், நம்மாழ்வார் தன்னைப் ‘பராங்குச நாயகி’ என்னும் நிலையிலும் உருவகித்து, திருமாலைக் காதலனாகப் பாவித்துப் பாடல்கள் புனைந்துள்ளனர். இவ்வகை ஆழ்வார் பாடல்கள் ‘நாயக நாயகி பாவம்’ என்னும் வைணவ உறவு நிலையைக் குறிப்பன.
இவை ஆணின் உடலில் உள்ள பெண் தன்மையை எழுப்பும் ‘குண்டலினி’ யோக முறையின் கீழ் நிலையை உணர்த்துகின்றன என்று பேரா.தோத்தாத்திரி தெரிவிக்கிறார்.
பக்தி இயக்க காலத்தில் ஆண்டாளின் நோன்பு நிகழ்வுகள் அவை சங்க காலத் தமிழ் மக்களின் நோன்பு வகைகளை ஒத்து அமைந்துள்ளன என்று காண்பது வியப்பளிக்கிறது. இந்த மாதிரியான நோன்புகளை சங்க காலம் முடிந்து சுமார் ஆயிரம் ஆண்டுகள் கழித்து ஆண்டாள் மேற்கொண்டாள் என்று நினைக்கும்போது கால அளவுகளைத் தாண்டிய ஒரு உன்னதமான கலாச்சாரத் தொடர்பு பிரமிக்க வைக்கிறது.
பெண் விடுதலை, பெண் அடிமைத்தனம் என்று நமது பண்டைய வணக்க முறைகளைப் பழிக்கும் ‘முற்போக்காளர்கள்’, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாடல் இயற்றிய ஒரு பெண்ணைத் தெய்வமாகவே நினைத்து வழிபட்டுள்ள உயர்ந்த பண்பாட்டைப் பற்றிப் பேசாமல் இருப்பது புரிந்துகொள்ளக் கூடியதே.
Good.
This is the second article,
I am reading in your blog.
To make it useful, you may consider
to conclude with three useful points for
busy life.
I am not a believer of appreciations and comparison only,
Sathi
Sent from my iPhone
>
LikeLike