கொழுக்கட்டை மஹாத்மியம்

நெய்வேலியில் ஸத் சங்கத்துக்கு எதிரில் ஸ்டோர் ரோடு ஜங்ஷனில் மேடையில் நாலு பேரும், கீழே மூன்று பேரும், மொத்தமாக எட்டு பேர் (வாக்கிங் ஸ்டிக்குடன் நிற்கும் சிலையையும் சேர்த்து) கன்னா பின்னாவென்று வசை பாடிக்கொண்டிருந்தால் பிள்ளையார் சதுர்த்தி வந்துவிட்டது என்று அர்த்தம். சைக்கிளை சற்று வேகமாக மிதித்து வீடு வந்து சேர்ந்தால் பாட்டியாத்து கொழுக்கட்டை காத்திருக்கும்.
‘பாட்டி’ என்பது இரண்டு வீடுகள் தள்ளி இருந்த பிரகாஷின் பாட்டி, சுப்பிரமணியம் மாமாவின் மகன். பாட்டி எங்களுக்கும் பாட்டி தான். அவ்வளவு அன்பு. ‘பாட்டி ஆமருவிக்கும் கண்ணனுக்கும் குடுக்கச் சொன்னா’ என்று பிரகாஷ் கொண்டுவந்து கொடுத்திருப்பான்.
எங்கள் வீட்டில் விநாயகர் சதுர்த்து கொண்டாடுவதில்லை என்பதால் பசங்களுக்கு என்று பாட்டி கொடுத்தனுப்புவாள். அதை வெளிப்பாத்திரம் என்று சொல்லி தனியாக வைத்திருப்பார்கள். வெளியோ, உள்ளோ – எனக்கு அதனுள்ளிருக்கும் கொழுக்கட்டை தேவாம்ருதமாக இருக்கும்.
imagesஅதெப்படித்தான் ஐயர்கள் வெல்லம் வைத்து கொழுக்கட்டை செய்கிறார்களோ என்று வியந்ததுண்டு. எல்லா ஐயர் வீடுகளிலும் ஒரே சுவையுடன் பிள்ளையார் கொழுக்கட்டை இருப்பது ஆராயும் சீர்மைத்தே.
ஒருமுறை எங்கள் பிடுங்கல் தாங்காமல் வீட்டில் அதே போல் கொழுக்கட்டை செய்கிறேன் பேர்விழி என்று வெல்லம் போட்ட உப்புமா கீண்டப்பட்டதை நெய்வேலி கெஜட்டில் போட்டது லோக பிரசித்தம்.
பிறகு புதிய முறையில் ‘காரடையான் நோன்பு கொழுக்கட்டை’ செய்கிறேன் என்று துவங்கி, அதில் வெல்லம், உப்பு என்று இரண்டு வகை செய்யப்பட்டது. அடுத்த ஒரு வாரம் எங்களுக்கு கிரிக்கெட் விளையாட பந்துக்குப் பஞ்சமில்லாமல் ஆனது. Reduce, Reuse, Recycle என்று சிங்கப்பூரில் இப்போது சொல்கிறார்கள். நாங்கல்லாம் அப்பவே அப்புடி என்று சிங்கப்பூர் அரசுக்குச் சொல்லலாம்.
images-2ஐயங்கார்கள் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுவதை சாமர்த்தியமாகச் செய்வார்கள். மண் பிள்ளையாரை வாங்கி அவருக்குத் திருமண் இட்டு, ‘தும்பிக்கையாழ்வார்’ என்று நாமகரணம் பண்ணி, அவருக்குப் பக்கத்தில் பெருமாள் படத்தையும் ஏள்ளப்பண்ணிவிடுவது சில ஐயங்கார்களின் வழக்கம். யாராவது வைதீகர்கள் வந்துவிட்டால் ‘பசங்களுக்காக, கொஞ்சமா, நம்ம சம்பிரதாயப்படி..’ என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இவ்வளவு மழுப்பாமல் ‘கொழுக்கட்டை சாப்பிட ஆசையாக இருந்தது’ என்று சொல்லியிருக்கலாம்.
எங்கள் வீட்டில் இந்த வழக்கம் இல்லை. பிரகாஷின் பாட்டி இருந்தாரோ பசங்கள் நாங்கள் பிழைத்தோம்.
இப்படியாக இருந்த எங்கள் கொழுக்கட்டைத் தொடர்பு ஒரு நாள் நின்றுபோகும் போல் ஆனது. பிரகாஷ் பாட்டி காலமானார். பாட்டி போனது துக்கம் தான் என்றாலும் ‘இனி கொழுக்கட்டை கிடைக்குமோ கிடைக்காதோ’ என்கிற தவிப்பு இருந்தது வாஸ்தவம்.
அடுத்த வருஷம் பிள்ளையார் சதுர்த்தி அன்று வாசலுக்கும் உள்ளுக்குமாக அலைந்து கொண்டிருந்தேன். நேரம் ஆகிக்கொண்டிருந்தது. பிரகாஷையோ, அவன் தம்பி ஶ்ரீதரையோ காணவில்லை. ‘சரி நமக்கு அதிர்ஷ்டம் அவ்வளவுதான்’ என்று எண்ணி நொந்து போய் பாடம் படிக்க உட்கார்ந்தேன்.
பிரகாஷ் வேகமாக வந்தவன், ‘அம்மா குடுக்கச் சொன்னா’ என்றான்.
பிள்ளையார் கைவிடவில்லை.

தி ஹிந்து – ஒரு மினி பார்வை

வாஞ்சிநாதன் பற்றிய கீழ்த்தரமான கட்டுரை வெளியிட்டதற்கு தி ஹிந்து வருத்தம் தெரிவித்துள்ளது (அ) தெரிவிப்பது போல் எழுதியுள்ளது.

கட்டுரையை வாசித்தேன். தகவல் பிழைகள் இருப்பதை மூன்றாம் வகுப்புப் பிள்ளை கூட கண்டுகொள்ளும் அளவில் உள்ளது கட்டுரை. எழுத்தில் கிஞ்சித்தும் தரம் என்பது இல்லை. முரசொலியைப் படிக்கிறோமா என்று எண்ணத் தோன்றியது. தி ஹிந்துவில் தரம் இறங்கியுள்ளது பற்றிப் பலமுறை எழுதி இருந்தாலும், இம்மாதிரி அடிப்படைத் தகவல்களைக் கூட சரி பார்க்காமல் எழுதியிருப்பது, அதிர்ச்சியே. முன்னொரு முறை நாலாந்தர நக்கீரனில் ‘ஜெயலலிதா பசு மாமிசம் சாப்பிட்டார்’ என்பதாக வந்த கட்டுரையை ஆங்கில தி ஹிந்து மொழிபெயர்த்து வெளியிட்டது. அந்தப் பாரம்பரியம் தொடர்கிறது போல் தெரிகிறது. தமிழ் ஹிந்து ‘தி நக்கீரன்’ என்று பெயர் மாற்றிக்கொள்ளலாம்.

ஆங்கில தி ஹிந்து சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது போல் படுகிறது. எடிடோரியல், ஓப்பன் பேஜ், பேட்டி முதலியவற்றை விலக்கி வைத்துப் பார்த்தால், முன்னேற்றம் தெரிகிறது. புதிய எழுத்தாளர்கள் தென்படுகிறார்கள்.ஆனால் ஆங்கிலத்தின் தரம் குறைந்துள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. புதிய எழுத்தாளர்கள் , செய்தியாளர்கள் தங்கள் கட்டுரைகளில் ‘ஆராய்ச்சி’ என்பதே இல்லாமல் பார்த்துக் கொள்வது ‘சிறப்பாக’ உள்ளது. வெறும் தகவல்களைச் சொல்வதற்கு மேல் இவர்கள் வேறொன்றையும் செய்வதில்லை. மாத்ருபூதம் என்பார் எழுதும் நகைச்சுவைப் பகுதி அவ்வப்போது கிச்சு கிச்சு மூட்டுகிறது. மற்றபடி பரத்வாஜ் ரங்கன் எழுதும் சினிமா விமர்சனம், வாராந்திர நூல் விமர்சனங்கள் மற்ற நாளிதழ்களை விட நன்றாக உள்ளன. நூல்கள் பெரும்பாலும் தேச துரோக இடது சாரி நூல்கள் என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இதையெல்லாம் யாராவது ஹிந்துவில் பணிபுரிபவர்கள் மேலிடத்திற்கு எடுத்துச் சொல்லலாம். ஆனால் இடதுசாரிகளின் காதுகள் மார்க்ஸ்-ஈயத்தால் அடைக்கப்பட்டவை என்பதால் பலன் இருக்குமா என்று தெரியவில்லை. சங்கை ஊதிப் பார்க்கலாம். அவ்வளவுதான்.

ஹிந்துவில் ‘பிசினஸ் லைன்’ நல்ல கட்டுரைகளைத் தாங்கி வருகிறது. மீடியாக்ரிட்டி இன்னமும் அண்டவில்லை.

முக்கியமாக ஹிந்துவின் ஐ-பேட் செயலி சிறப்பாக உள்ளது. எடிட்டோரியல், ஓப்பன் பேஜ், பேட்டிகள் முதலியவை நம் கண்ணில் படாமல் இருக்க செயலியில் வழி உள்ளதா என்று தெரியவில்லை. தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், துக்ளக், வலம் முதலியவை ஹிந்துவின் ஐபேட் செயலி போல் செய்துகொள்வது நல்லது.

ஒரு காலத்தில் ‘ஹிந்து’வில் பணியாற்றவேண்டும் என்று விரும்பியிருந்தேன். இன்னமும் விரும்புகிறேன். ஆனால் கொள்கை ரீதியில் முடியமா என்று தெரியவில்லை.

ஆஸ்பத்திரியில் ஒரு கொலைப்படம்

சமீபத்தில் மருத்துவமனையில் சில நாட்கள் இருந்தேன். ஸ்டிறைட் டைம்ஸ், தமிழ் முரசு, கிண்டில் புத்தகங்கள், மலாய் மொழி தினசரியின் படங்கள் என்று அனைத்தையும் பார்த்து முடித்த பின் வேறு வழி இல்லாமல் டி.வி. பார்த்தேன். சேனல் ந்யூஸ் ஏஷ்யாவில் எப்படித்தான் ஒரே செய்தியை நாள் முழுவதும் போடுகிறார்களோ? செய்தியாளருக்கே போர் அடிக்கவில்லையா என்று நினைத்துக் கொண்டிருக்கையில் வசந்தம் ஒளிவழியில் ‘மதயானைக் கூட்டம்’ என்று ஒரு திரைப்படம் துவங்கியது.

தயக்கத்துடன் பார்க்கத் துவங்கினேன். ஒரு இழவுடன் துவங்கியது படம். ஆரம்பமே பிரமாதம் என்று மலாய் சேனல் சூர்யாவை நாடினேன். இரண்டு பேர் ஏதோ கோபமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். திரும்பவும் சி.என்.ஏ. திரும்பவும் அதே செய்திகள். தூக்கமும் வரவில்லை. மீண்டும் வசந்தம். ஒரு இழவு முடிந்து இன்னொன்று துவங்கியிருந்தது போல் இருந்தது. இல்லையாம். அந்த ஒன்றே நீண்ண்ண்ண்டு கொண்டிருந்தது.

இறந்த ஒருவரின் ப்ளாஷ்பேக், மீண்டும் இழவு, மீண்டும் ப்ளாஷ்பாக், கத்திக் குத்து, இல்லை, அரிவாள் வெட்டு, ஒரு மலையாளப் பெண் முகம் காட்டுகிறாள், மீண்டும் சாவு, மீண்டும் ஒப்பாரி..

இப்படியாகப் பல ஒப்பாரிகளையும், இழவுகளையும் காட்டி, ஒவ்வொன்றின் நுண் காரியங்களையும் விளக்கி, மீண்டும் கொலை செய்து, மீண்டும் … முடியல சாமி.

யார் யாரை வெட்டுகிறார்கள் என்பது போய், அடுத்த முறை யாருடைய இழவு வரும் என்று எதிர்பார்க்கும்படி இருந்தது படம். கடைசியில் படத்தில் யாராவது மிஞ்சுவர்களா இல்லை எல்லாருவடைய காரியத்தையும் காட்டுவார்களா என்று யோசிக்கத் துவங்கினேன்.

ஒரு வழியாகப் படம் முடிந்தது. ஒரு பிளிரல் ஒப்பாரியுடன் தான்.

சாதியை ஒழிப்போம் என்கிறார்கள். கள்ளப்பய என்று பெருமிதம் தொனிக்கும் வசனங்கள். தேவர் பெருமை வேறு.

க்ளேனெகல்ஸ் ஆஸ்பத்திரிக்கு ஒரு வேண்டுகோள்: தயவு செய்து அனிமல் ப்ளானெட் சேனல் வையுங்கள். மிருகங்கள் அனாவசியமாகக் கொல்வதில்லை.

சொந்தம்

‘இதென்ன, ப்ராமினா? அப்பா பேர் ஏதோ ஐயங்கார்னு போட்டிருக்கு? இங்க வாங்க மிஸ்டர்,’ என்றார் டேவிட் ஞானாசீர்வாதம்.

கடலுர் எம்ப்ளாய்மெண்ட் ஆபீசில் இருந்து ஸ்டேட் எஜுகேஷன் டிபார்ட்மெண்ட்ல் எல்.டி.ஸி (Lower Division Clerk) வேலைக்குப் போகச் சொல்லி வந்த இண்டர்வியூ கார்டை பார்த்தபடியே வந்தான் 17 வயது தேவா. 1962ல் இப்படி இண்டர்வியூ கார்ட் வந்தால் வேலை உறுதி.

‘பெருமாள் கண்ணைத் தொறந்துட்டார். பத்தானியாத்து கடனை அடைச்சுடலாம். நன்னா பார்த்து வேலை செய்டா. நல்ல பேரோட நன்னா இரு,’ வாழ்த்தி அனுப்பியிருந்தாள் அம்மா.

‘நீயும் வாம்மா கடலூருக்கு. வந்து எனக்குத் தளிகை பண்ணிப்போடு,’ எப்படியும் வரப் போவதில்லை, கேட்டு வைப்போம், வந்தால் அவளுக்கும் ஒரு மாறுதலாக இருக்கும் என்ற நப்பாசையில் கேட்டான் தேவா. நார்மடிப் புடவையுடன் அவள் வீட்டை விட்டே வருவதில்லை என்றாலும் அம்மாவாயிற்றே, அழைத்துக் கொண்டு போகலாம் என்ற எண்ணம் தான்.

‘நன்னாருக்கு. நீ போய் வேலை செஞ்சுண்டு தனியா இருந்தா ரெண்டு காசு சேரும். அப்பாவோட காரியத்துக்கு வாங்கின கடன், பத்தானியாத்துக் கடன்னு ஏகப்பட்டது இருக்கு. என்னையும் அழைச்சுண்டு போனா, பொண்ணையும அழைச்சுண்டு வரணும். செலவு ஆகாதா? இதெல்லாம் எப்படி அடைக்கறது?’ என்ற எதிர்பார்த்த பதில் கிடைத்தது.

‘என்ன மிஸ்டர், இஸ் யுவர் பாதர்  அன் ஐயங்கார்? ஆர் யூ நாட் ப்ரம் பாக்வார்ட் கிறிஸ்டியன் கம்யூனிட்டி?’ என்ற டேவிட் ஞானாசீர்வாதம் அப்போது தான் நிமிர்ந்து, திருமண்ணுடன் நின்ற தேவாவை முதல் தடவையாகப் பார்த்து, கண்கள் விரிந்தார்.

‘ப்ளடி ஹெல். ஐம் சாரி மை பாய். இந்த எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ்ல கொழப்பிட்டாங்க. இந்த எல்.டி.சி. போஸ்ட் ரிஸர்வ்ட் கம்யூனிட்டிக்கு. உங்க பேர் கொஞ்சம் அப்பிடியும் இப்பிடியுமா இருக்கு. ப்ராமின்லயும் தேவநாதன்னு பேர் வைப்பாங்களா?’ என்றார்.

‘ஆமாம் ஸார். இங்க பக்கத்துல திருவஹீந்திரபுரம்னு ஒரு ஊர். அந்த பெருமாள் பேர் தேவநாதன்,’ வாய் மட்டும் சொல்லிக்கொண்டிருக்க, மனது பத்தானியாத்துக் கடன், கோபால் முதலியார் மாட்டுக் கடன் என்று கணக்குப் போட்டது.

‘ஓகே. ஐம் சாரி. நான் உங்கள முதல்லயே பார்த்திருக்கணும். யூ மே ஹாவ் டு லீவ்’ என்றவர் கீழே குனிந்து கொண்டார்.

‘அப்ப என் வேலை? நீங்க டைப் அடிக்க சொன்னதா ப்யூன் சொன்னாரே?’ வேலையை எப்படி விடுவது ?

‘அடுத்த அப்பாயிண்ட்மெண்ட் பையன் பார்த்துப்பான். நீ எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ் போப்பா.’

திடீரென உலகம் இருண்டு, கால்களில் வலு இன்றி சேரில் அமர்ந்த தேவாவின் தோளைத் தொட்ட டேவிட் ஞானாசீர்வாதம், ‘ஆர் யூ ப்ரம் எ புவர் பேமிலி?’ என்றார், தேவாவின் வேஷ்டியையம் கால் செருப்பையும் பார்த்தபடி.

எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸில் சூப்பரிண்டெண்ட், ‘மிஸ்டர் தேவநாதன், உங்க கேஸ் பத்தி டேவிட் சொன்னார். அடுத்த மாசம் நெய்வேலில எல்.டி.சி. வேலைக்கு ஆள் எடுக்கறாங்க. உங்க பேர மொதல்ல போடச் சோல்லியிருக்கார். நீங்க அவருக்குச் சொந்தமா?’ என்றார்.

‘சொந்தம் தான். ஒரு வகையில், எல்லாரும்’  நினைத்துக் கொண்டான் தேவா.

%d bloggers like this: