‘இதென்ன, ப்ராமினா? அப்பா பேர் ஏதோ ஐயங்கார்னு போட்டிருக்கு? இங்க வாங்க மிஸ்டர்,’ என்றார் டேவிட் ஞானாசீர்வாதம்.
கடலுர் எம்ப்ளாய்மெண்ட் ஆபீசில் இருந்து ஸ்டேட் எஜுகேஷன் டிபார்ட்மெண்ட்ல் எல்.டி.ஸி (Lower Division Clerk) வேலைக்குப் போகச் சொல்லி வந்த இண்டர்வியூ கார்டை பார்த்தபடியே வந்தான் 17 வயது தேவா. 1962ல் இப்படி இண்டர்வியூ கார்ட் வந்தால் வேலை உறுதி.
‘பெருமாள் கண்ணைத் தொறந்துட்டார். பத்தானியாத்து கடனை அடைச்சுடலாம். நன்னா பார்த்து வேலை செய்டா. நல்ல பேரோட நன்னா இரு,’ வாழ்த்தி அனுப்பியிருந்தாள் அம்மா.
‘நீயும் வாம்மா கடலூருக்கு. வந்து எனக்குத் தளிகை பண்ணிப்போடு,’ எப்படியும் வரப் போவதில்லை, கேட்டு வைப்போம், வந்தால் அவளுக்கும் ஒரு மாறுதலாக இருக்கும் என்ற நப்பாசையில் கேட்டான் தேவா. நார்மடிப் புடவையுடன் அவள் வீட்டை விட்டே வருவதில்லை என்றாலும் அம்மாவாயிற்றே, அழைத்துக் கொண்டு போகலாம் என்ற எண்ணம் தான்.
‘நன்னாருக்கு. நீ போய் வேலை செஞ்சுண்டு தனியா இருந்தா ரெண்டு காசு சேரும். அப்பாவோட காரியத்துக்கு வாங்கின கடன், பத்தானியாத்துக் கடன்னு ஏகப்பட்டது இருக்கு. என்னையும் அழைச்சுண்டு போனா, பொண்ணையும அழைச்சுண்டு வரணும். செலவு ஆகாதா? இதெல்லாம் எப்படி அடைக்கறது?’ என்ற எதிர்பார்த்த பதில் கிடைத்தது.
‘என்ன மிஸ்டர், இஸ் யுவர் பாதர் அன் ஐயங்கார்? ஆர் யூ நாட் ப்ரம் பாக்வார்ட் கிறிஸ்டியன் கம்யூனிட்டி?’ என்ற டேவிட் ஞானாசீர்வாதம் அப்போது தான் நிமிர்ந்து, திருமண்ணுடன் நின்ற தேவாவை முதல் தடவையாகப் பார்த்து, கண்கள் விரிந்தார்.
‘ப்ளடி ஹெல். ஐம் சாரி மை பாய். இந்த எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ்ல கொழப்பிட்டாங்க. இந்த எல்.டி.சி. போஸ்ட் ரிஸர்வ்ட் கம்யூனிட்டிக்கு. உங்க பேர் கொஞ்சம் அப்பிடியும் இப்பிடியுமா இருக்கு. ப்ராமின்லயும் தேவநாதன்னு பேர் வைப்பாங்களா?’ என்றார்.
‘ஆமாம் ஸார். இங்க பக்கத்துல திருவஹீந்திரபுரம்னு ஒரு ஊர். அந்த பெருமாள் பேர் தேவநாதன்,’ வாய் மட்டும் சொல்லிக்கொண்டிருக்க, மனது பத்தானியாத்துக் கடன், கோபால் முதலியார் மாட்டுக் கடன் என்று கணக்குப் போட்டது.
‘ஓகே. ஐம் சாரி. நான் உங்கள முதல்லயே பார்த்திருக்கணும். யூ மே ஹாவ் டு லீவ்’ என்றவர் கீழே குனிந்து கொண்டார்.
‘அப்ப என் வேலை? நீங்க டைப் அடிக்க சொன்னதா ப்யூன் சொன்னாரே?’ வேலையை எப்படி விடுவது ?
‘அடுத்த அப்பாயிண்ட்மெண்ட் பையன் பார்த்துப்பான். நீ எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ் போப்பா.’
திடீரென உலகம் இருண்டு, கால்களில் வலு இன்றி சேரில் அமர்ந்த தேவாவின் தோளைத் தொட்ட டேவிட் ஞானாசீர்வாதம், ‘ஆர் யூ ப்ரம் எ புவர் பேமிலி?’ என்றார், தேவாவின் வேஷ்டியையம் கால் செருப்பையும் பார்த்தபடி.
எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸில் சூப்பரிண்டெண்ட், ‘மிஸ்டர் தேவநாதன், உங்க கேஸ் பத்தி டேவிட் சொன்னார். அடுத்த மாசம் நெய்வேலில எல்.டி.சி. வேலைக்கு ஆள் எடுக்கறாங்க. உங்க பேர மொதல்ல போடச் சோல்லியிருக்கார். நீங்க அவருக்குச் சொந்தமா?’ என்றார்.
‘சொந்தம் தான். ஒரு வகையில், எல்லாரும்’ நினைத்துக் கொண்டான் தேவா.
Like this:
Like Loading...